×

’சண்டைக்காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படம்’ பிக்பாஸ் 23-ம் நாள்

பிக்பாஸ் பல ட்விஸ்டுகளைப் பார்வையாளர்களுக்குத் தந்திருக்கிறார். ஆனல், பிக்பாஸ்க்கே வியக்கும் சில விஷயங்கள் நடந்தன. வழக்கமாக சண்டை மூளவே டாஸ்க் என்பது அரங்கேறும். ஆனால், இன்றோ டாஸ்கில் வராத சண்டை மற்ற நேரத்தில் வந்து பிக்கியின் நெஞ்சில் பால் வார்த்தது. அப்படியென்ன நடந்தது எனப் பார்ப்போம். 23-ம் நாள் ’பொன்மகள் வந்தாள்’ என்ற பழைய பாட்டை ஒலிக்க விட்டார் பிக்கி. நேற்றிரவு ஓவர் டைமில் டாஸ்க் செய்ததால் ஓரிருவர் தவிர மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எழுந்து வந்தும், இந்தப்
 

பிக்பாஸ் பல ட்விஸ்டுகளைப் பார்வையாளர்களுக்குத் தந்திருக்கிறார். ஆனல், பிக்பாஸ்க்கே வியக்கும் சில விஷயங்கள் நடந்தன. வழக்கமாக சண்டை மூளவே டாஸ்க் என்பது அரங்கேறும். ஆனால், இன்றோ டாஸ்கில் வராத சண்டை மற்ற நேரத்தில் வந்து பிக்கியின் நெஞ்சில் பால் வார்த்தது. அப்படியென்ன நடந்தது எனப் பார்ப்போம்.

23-ம் நாள்

’பொன்மகள் வந்தாள்’ என்ற பழைய பாட்டை ஒலிக்க விட்டார் பிக்கி. நேற்றிரவு ஓவர் டைமில் டாஸ்க் செய்ததால் ஓரிருவர் தவிர மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எழுந்து வந்தும், இந்தப் பாட்டுக்கு எப்படிய்யா ஆடறதுன்னு புரியாமல் கை,கால்களை அசைத்தார். ஷிவானி நேற்றிரவு ஆடிய ‘டார்லிங்… டம்பர்க்’ பாடலுக்கான மூவ்மெண்டை லேசாக மாற்றி ஆடிக்கொண்டிருந்தார்.

அனிதா – சுரேஷ் பஞ்சாயத்து இன்றும் தொடர்ந்தது. ‘மன்னிப்பு கேட்கிறேன். அதை நின்னு கேட்டுட்டு, உன் மன்னிப்பு வேணாம்’னு கூட சொல்லமாட்டேங்கிறார்’ என ரியோ, ஆரியிடம் அணத்திக்கொண்டிருந்தார் அனிதா. ‘அதான் அவர் சங்காத்தமே வேண்டாம்னு ஒதுங்கிட்டார். நீயும் உன் வேலையைப் பார்க்க வேண்டியதுதானே’ என ரியோ கேட்க, ‘நீங்க யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணல’ என வண்டியை வேற பக்கம் திருப்பினர்.

ஆரி நிதானமாக தான் அனிதாவின் பக்கம் நிற்பதை விளக்க, ‘அவரோட சாணக்கிய மூளை’ புரியுதா?’ எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

சுமங்கலி தொடர்பாக அனித பேசிய பிரச்சனையில் மூன்று லேயர்கள் உள்ளன. ஒன்று, ’சுமங்கலி வாங்க’ என அழைத்து அந்த சடங்கை செய்ய சொன்னதால், தன் வீட்டில் மாமியார் எதிர்கொண்ட அனுபவங்கள் நினைவுக்கு வர, அதை பேசினார். அனிதா பேசியதில் எந்தத் தவறும் இல்லை. தமிழ்நாடு மாதிரியான பகுத்தறிவு வளர்ந்த மாநிலத்தில் சடங்குகளே இல்லாமல் திருமணம் நடப்பது எல்லாம் வழக்கம்தான். ஆயினும், விதவை, குழந்தை பிறக்காதவர்கள்  போன்றவர்களை நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் நடக்கத்தான் செய்கிறது. அதைத்தான் அனிதா சொன்னார். சரியான பார்வையும்தான்.

லேயர் இரண்டு – சுரேஷ் சென்ற தலைமுறையின் ஆள். அதனால், சாஸ்திர, சடங்குகள் பற்றிய நவீன கருத்தாக்கத்தை அவரின் உள்மனம் ஏற்பதில் சிக்கல் இருக்கும். அதனால், அனிதாவின் பேச்சே அவருக்கு எரிச்சல் தந்திருக்கும். மேலும், அவர் பெயர் உதாரணத்தோடு சொல்லப்படுகையில், தான் ஒரு பிற்போக்குவாதி எனக் காட்டப்படுமோ என்ற கவலையும் இருக்கலாம். அதனால்தான் இந்தப் பிரச்சனையை விவாதிக்க தயாராக இல்லை.  அவரை அப்படிச் சித்தரிப்பது என் நோக்கமல்ல என்று தெளிவாகவே அனிதா புரிய வைத்துவிட்டார். அதை மீறியும் அனிதா இதுகுறித்து பெரிதும் கவலை பட வேண்டிய அவசியமில்லை.  

லேயர் மூன்று: தான் சரியாகத்தானே பேசினோம்! அப்படி இருந்தும் ஒருவர் இந்தளவுக்கு வருத்தப்பட்டிருக்கிறாரே… இது எப்படி பார்வையாளர்களுக்குப் போகும் என்ற கவலை அனிதாவுக்கு. அதனால்தான் இந்தப் பிரச்சனை தூக்கி தூர எறிய முடியாமல் தவிக்கிறார்.

அனிதாவைச் சமாதானப்படுத்தி விட்டதாக அவரவர் வேலைகளில் மூழ்க, பாத்ரூமில் அழுதுகொண்டிருந்தார் அனிதா. கதவைத் திறக்க வைத்து நிஷா உள்ளே செல்ல, “வாடா போடான்னு சொன்ன ஷனமிடமே ராசியிட்டாரு… நான் என்ன சொன்னேன்” எனச்  சொல்லி பாத்ரூமில் அனிதா அழ, வாசலில் அதை ஷனம் கேட்டு ஜெர்க்கானார்.

வெளியே வந்த அனிதா “என் புருஷன் இந்த ஷோக்கு போனால் தாக்கு பிடிக்க முடியாதுனு சொன்னார். அதைக் கேட்காமல் வந்தது தப்புதா” என எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்.

‘நீ சொன்னது சரியான விஷயம்னா அதில் உறுதியா நில்லு. அழுதினா… அதில் நீ ஸ்ட்ராங்க இல்லன்னு அர்த்தம்’ என பாலா சரியான அட்வைஸ் சொன்னார். டக்கென்று ‘பாலா மாதிரி ஸ்ட்ராங்கா எனக்கு யாருமே சப்போர்ட் பண்ணல’ என வண்டியை வேற பக்கம் திருப்பினார் அனிதா. சமாதானம் படுத்த வந்தவர்கள் அயர்ச்சியானார்கள். அதிலும் ரியோ, ‘நேத்து நைட் அவளுக்காகத்தான் அவ்ளோ பேசினேன். இன்னும் சப்போர்ட் பண்ணல… பண்ணலனு சொன்னா என்ன செய்யதாம்’ என வாய்விட்டு சொல்லிவிட்டே நகர்ந்துவிட்டார்.

சுரேஷ் தவிர வீட்டில் உள்ள அனைவருமே அனிதாவை அமைதிப்படுத்த முயன்றும் முடியவில்லை. பிக்பாஸ் கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைத்தார் அனிதாவை. ‘ஹாய் அனிதா’ என மகிழ்ச்சிபடுத்தும் உரையாடலோடு தொடங்கினார் பிக்கி. ‘ப்ராங்கா பேசறது பிரச்சனையா இருக்கு’ என மீண்டும் அணத்த, ‘நீங்க நீங்களா இருங்க’ என்று அட்வைசினார் பிக்கி. அப்பறம் உங்க ஹஸ்பெண்ட் ‘கன்னுக்குட்டியை நலம் விசாரித்தார்’ என்று சொன்னதும் உடைந்து அழுதார் அனிதா.

அது ஒரு பிரிவின் வலியை உணர்த்தும் விதமாகவேஇருந்தது. ‘தைரியாக இருங்க’ என அனிதாவுக்கு நம்பிக்கை சொல்லி பிரச்சனைக்கு எண்ட் கார்டு போட்டார் பிக்கி. ‘அப்பாடா’ என ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ்.

தங்கம் தேடும் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். அதாவது லிவிங் ஏரியாவில் மணல் குவியலில் தங்கம் கிடைக்கும். அதைப் போட்டியாளர்கள் நால்வர் கொண்ட அணிகளாகப் பிரிந்து குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் சேகரிக்க வேண்டும்.

முதலில் சென்ற பாலா குருப்பைப் பார்த்து, ‘பையெல்லாம் எடுத்துட்டு போகக்கூடாது. விதிமீறல்’ என ஷனம் கட்டையைப் போட, ஒரு நிமிஷம் யோசித்து, ஆனது ஆகட்டும் என பையோடு உள்ளே போனார் பாலா. இரண்டாம் குழுவில் ஷனம் போகும்போது பெரிய பிளாஸ்ட்டிக் ட்ரேவையே தூக்கிச் சென்றார். அதைப் பாலா கேட்டதும் முதன்முறையாக சம்யுக்தாவின் ஆவேசத்தைப் பார்க்க முடிந்தது. வர்லாம் வர்லாம் வா…

ஒவ்வோர் அணியும் தங்கம் சேகரிக்க, ஆரி அசந்து தூங்கிக்கொண்டிருக்க, ஆஜித்தும் சுரேஷூம் அவர் சேகரிப்பில் உள்ள தங்கத்தை ஆட்டைய போட்டார்கள். அதற்கு முன்பே ‘திருடுவதைத் திட்டாதே. நீ பத்திரமா வெச்சிக்கோ’ என பொதுவாக டிஸ்க்ளைமர் சொல்லியிருந்தார் சுரேஷ். சரியான ஆள்தான்.

சிறிது நேரத்தில் ஷிவானி, யார் யார் திருடினாங்க என்று ஆரிடம் போட்டுக்கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கம் திருடுவதில் பாலாவின் சேகரிபை எடுக்க ஷிவானியே வந்தும், அவர் விடவில்லை. அந்த நேரத்தில் அவர் நடந்துகொண்டதைப் பார்க்கையில் 90’ஸ் கிட்ஸ் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தார்கல். தங்கம் சேகரிப்பில் பெரியளவு சுவாரஸ்யம் இல்லை.  

அன்றைய நாள் முடியும் நேரமானது. ஆனால், கண்டண்டே இல்லையே இப்ப நான் என்ன பண்றது என பிக்பாஸ் எடிட்டர் தலையைச் சொறிந்துகொண்டிருந்தார். அர்ச்சனா முகம் கோபமாக இருக்கே அங்கே ஜூம் செய்ய, பெரிய சண்டைக்கான மேகம் கருத்திருந்தது. பிக்கி உற்சாகமாகி விட்டார்.

வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் டீமில் உள்ள பாலா, அதைச் செய்யாமல் தூங்கி விட்டார். சுத்தம் டீமின் கேப்டன் வேல்முருகன் போய் எழுப்பியதும் ‘தூங்கிட்டு இருக்கிற ஆளை எழுப்பி வேலை சொல்றீங்க… செய்ய முடியாது’ என்றதும், ‘சரிங்க எசமான்’ என்று வந்துவிட்டார் வேல்.

அர்ச்சனா சமையல் முடித்து களைத்திருப்பார் போல. அவருக்கு பாலா இந்த ஆடிட்டியூட் எரிச்சலை உண்டாக்க, சத்தம் போட, எழுந்து வந்தார் பாலா. ‘உடம்பு சரியில்லன்னா, இப்படித்தான் செய்வீங்களா?’ என்றவாறு கூட்ட, ‘உடம்பு சரியில்லை’னு எனக்குத் தெரியாது’ என அர்ச்சனா சொல்ல, உங்கக்கிட்ட பேசல, நான் எங்க டீம் கேப்டன்கிட்ட சொல்றேன்’ என ரூடாகச் சொல்ல, வேல்ஸ் அலறிபோனார். என்மேலேயே வண்டியை ஏண்டா விடுற என்பதாகப் பாவமாய் பார்த்தார்.

’நான் கேப்டன் ஆனதும் அம்மியில அரைக்க விடறேன்’ அர்ச்சனாவைக் குத்திக்கொண்டிருந்தார். அப்படிச் சொன்னது சரியா என்ற பஞ்சாயத்து நடந்தது.

‘நீ பேசினது சரியில்ல பாலா’ என்று ரியோ சொன்னப்ப, ‘சரி, அப்படியே வெச்சிக்கோ’ என்று பாலாவின் ரிப்ளேவை எப்படி எதிர்கொள்வது என திகைத்தார் ரியோ. இப்படி ஒரு ரிப்ளையை எதிர்கொண்டது இல்லையா… கேமரா இருக்கிறதே என்ற நினைப்பா என்று தெரியாமல் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார்.

இந்த விஷயத்தில் பாலா நடந்துகொண்டது ரொம்பவே அராஜகம். ‘நேற்று நைட் நாங்களும் டாஸ்க் செஞ்சு. பகல் வெயிலில் வியர்க்க டாஸ்க் முடித்து, சமையலும் செஞ்சோம்ல’ என்று அர்ச்சனா சொன்னதுதான் அடிப்படை. பெரிய வீட்டில் சில வசதிகள் இருப்பதுபோல. சில கடமைகளும் இருக்கு. அதை மறந்துவிடுவதோ, டயர்டாகி தூங்கிவிடுவதோ பிரச்சனையில்லை. ஆனால், அதை பாலா அராஜமாக எதிர்கொண்டார்.

இந்தச் சிக்கல் ஆரம்பித்த இடம் பாலாவின் தூக்கம். ‘நாய் குலைக்காதப்ப… ஏன் எழுப்பறீங்க; என்றார். நாயை ஒழுங்கா கத்த விட்டிருந்தா, இந்தப் பிரச்னயே வந்திருக்காதே பிக்பாஸ். (ஆ… அப்படி நாயைக் கத்த விட்டிருந்தா, சுளையா 15 நிமிஷம் கண்ட்ண்ட் கிடைச்சிருக்காதே – இது பிக்கியின் மைண்ட் வாய்ஸ் அல்ல, ஒப்பன் வாய்ஸேதான்)

அதாகப்பட்டது இன்னிக்கு இவங்க, இப்படி இப்படியெல்லாம் நடந்துகிட்டாங்க. இதோடு முடிவு என்னான்னு நாளைக்குப் பார்ப்போம் என சீரியல் எப்பிசோட்டை நிறுத்துவதுபோல ’எண்ட்’ போட்டார் பிக்கி.  

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது

இருபத்தி ஒன்று | இருபத்தி இரண்டு