Home சினிமா ஒருநாள் ஹீரோயின்... குடிகார அப்பா... அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

ஒருநாள் ஹீரோயின்… குடிகார அப்பா… அழ வைத்த அம்மா பாட்டு! பிக்பாஸ் 5-ம் நாள் #BiggBoss4

பிக் பாஸில் இன்னுமோர் அழகான நாளை விவரித்தது நேற்றைய எபிசோட். பல்வேறு திசைகளிலிருந்து பல்வேறு கதைகளோடு ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ளும் பாலச்சந்தர் படத்தின் திரைக்கதையை ஒத்தது இன்றைய எபிசோட்.

கேப்டன் vs கேப்டன் குக்

முதன்நாள் சண்டையில் தொடர்ச்சியோடு தொடங்கியது இன்றைய பிக்பாஸ். ஷனம் ஷெட்டி இழுக்கும் சண்டையிலிருந்து நழுவி நழுவி ஓடிக்கொண்டிருந்தார் ரேகா. சண்டைக்குக்கூட வராமல் என்னதுக்கு பிக்பாஸ்க்கு வந்தீங்களோ என்பதுபோல ஒரு பார்வை பார்த்தார் ஷனம் ஷெட்டி. உண்மைதானே என்பதுபோல கேமராவை அசைத்தார் பிக்பாஸ்.

ஒரு கட்டத்தில் நான்தான் குக்கிங் கேப்டன் என்று குரல் உயர்த்தினார் ரேகா. அதைச் சரியாக ரம்யா கவனிக்காததால் ‘கேப்டனா?’ என்பதாகக் கேட்க, ’கேப்டன் குக்’ என்று திருத்தினார். குக் வித் கோமாளியிலிருந்து ரேகா இன்னும் வெளியே வரவில்லை போலிருக்கே.

சுரேஷ் செய்த உதவி பற்றி பேசுகையில் வாதம் காரசாரமாகியது. கொளுத்தி போடறது என்று யாரோ சொன்னதும் ‘கொளுத்தி போடறது இவர்தான்’ என கேமராவைப் பார்த்து பஞ்ச் டயலாக் பேசினார். நான் உன்னைக் கேட்டனா முருகேஷா – பிக்பாஸ் மைண்ட் வாய்ஸில் முனகினார்.

ஒரு வழியாக முன்கூட்டியே லைட்ஸ் அணைக்கப்பட்டன. மைக்கை மாட்டிக்கொண்டு கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு ரியோ அழைத்தார் பிக்பாஸ். ’மருத்துவர்கள் அறிவுரைப்படி சுரேஷ் பெட்டில்தான் படுக்கணும். பெண்களில் யாரையாவது வெளியே படுக்கச் சொல்லிவிட்டு சுரேஷ்க்கு பெட் ஒதுக்கி கொடுங்கள்’ என்றார்.

சோபாவில் ஹாயாகப் படுத்திருந்த சுரேஷ், ‘இதுவே போதும்’ என அடம்பிடித்தார். ரியோவும் நிஷாவும் வற்புறுத்த, சுரேஷ் ஏதோ கேட்க, ‘உள்ளே போய் படுங்க லிப்கிஸ்ஸே தாரேன்’ என்றார். ’நல்லவேளை அப்படியேதும் நடக்கல… தப்பிச்சோம்’ – (இதுதான்யா என் மைண்ட் வாய்ஸ் – இப்படிக்கு, பிக்பாஸ்)

ஐந்தாம் நாள்…

துள்ளல் பாடலுக்கு செமையாக ஆடினார்கள். ரம்யா இன்றைக்கு அந்த கண்ணாடி போட்டுட்டுதான் ஆடினார். தூங்கும்போது கண்ணாடி போடற பழக்கம் இருக்கும்போலிருக்கு (!)

’திக்’ ராப்

’சொந்த ப்ளாஸ்பேக்’ சொல்ல சோம்சேகர் வந்தார். அவரின் சட்டை கறுப்பு கலரில், வெள்ளையில் பெரிய பூப்பூவாகப் போட்டிருந்தது. இந்தச் சட்டையை எந்தப் படத்திலோ எந்த ஹீரோவோ போட்டிருந்தாரே என்று யோசிக்கும்போதே ‘நான் சோம்சேகர்’ எனப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அழகிய தமிழ்மகன் நிகழ்ச்சிக்கு வந்தது; தேர்வானது எனச் சொல்லிக்கொண்டிருந்தவரின் குரல் உடைந்தது. தனக்கு திக்குவாய் அதனால யாரிடமும் பேச்சுக்கொடுக்க மாட்டேன் என்றார். மற்றபோட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியெல்லாம் தெரியலையே என்பதாகப் பார்த்தார்கள். ‘என்னைய திட்டும்போதுகூட திக்காமல்தானே திட்டுன’ என்று நிஷா கலாய்த்தார். உண்மையில் நான்கு நாள் நிகழ்ச்சியில் ஓரிடத்தில்கூட அவருக்கு வாய்த் திக்கும் என்று நமக்குத் தோன்றவே இல்லை.

‘போன் எடுத்துபேசினால் திக்கும் என்பதால் நண்பர்களின் போனைக்கூட எடுத்ததில்லை’ என்றபோது, எனக்கும் சொற்கள் திக்கும் நண்பன் நினைவுக்கு வந்தான். அத்தனை தனிமையில் தன்னை ஒதுக்கிக்கொண்டான். இப்படி எல்லோருக்குமே யாராவது ஒருவரை நினைவூட்டும்.

சோம் நடித்த படம் வெளிவரவில்லை… ஒரு பிரேக் அப், அதனால் கெட்ட பழக்கங்கள்… அதிலிருந்து மீண்டு வர ஒவ்வொரு ஜம்பாகத் தாண்டிக்கொண்டிருந்தார். சோம்ஸ் ’ரெமோ’ போல ரொமாண்டிக் ஆள் என நினைத்தால், ஆட்டோகிராப் சேரன் மாதிரி ஃபீல் பண்ணி பேசறாரே. கடைசியாக அவர் திக்காமல் பாடிய அந்த ராப் பாடல் அட்டகாசம்.

பேசி முடித்து கீழே வந்ததும் எல்லோரும் கட்டிப்பிடித்து ஆறுதலாக அணைத்துக்கொண்டார்கள்.

ராக்கம்மா..

‘ஒரு சிறிய இடைவேளை’ எனக் கமல் சொல்வதைப்போல பிக்பாஸ் சொல்லியிருப்பார் போல, வேல்முருகன் ‘அடி என்னடி ராக்கம்மா…’ பாடலைப் பாட எல்லோரும் உற்சாகமாக ஆடினார்கள்.

ஒருநாள் ஹீரோயின் ரம்யா

’வந்த பாதையை’ச் சொல்ல ஆரம்பித்தார் ரம்யா பாண்டியன். அப்பா, ஒரு படம் இயக்கியுள்ளாராம். அது வெற்றிப்படமாக இல்லாததால் ஊருக்கே சென்று விட்டாராம். (ரம்யா பாண்டியன் அப்பா இயக்கிய படம் ஊழியன். அருண்பாண்டியன் – வினிதா நடித்திருப்பார்கள்) பாம்பு கடித்து அவரின் அப்பா இறந்ததைச் சொன்னார். ஒரு பேட்டியில் ‘ஆன் பிள்ளையைப் போல என்னை வளர்த்தார் அப்பா’ என்று சொல்லியிருப்பார் ரம்யா பாண்டியன். பார்ட் டைம் பார்த்து படிச்சது, ஒரு படத்தில் நடிக்க புக் பண்ணப்பட்டதும், வேலையா… சினிமாவா… எனக் குழம்பி கடைசியில் வேலையை விட்டிருக்கிறார். ஆனால், திங்கள் கிழமை ஹீரோயினாக சூட்டிங் செல்ல, அடுத்த நாளே வேறு ஒருவர் ஹீரோயினாக்கப்பட்டாராம். சினிமாத் துறையில் இப்படியான கதைகள் நிறைய உண்டு.

அதற்குப் பிறகு ‘ஜோக்கர்’பட வாய்ப்பு. மீண்டும் வாய்ப்பில்லாமல் வீட்டிலிருக்க, அப்போதுதான் புகழ்பெற்ற மொட்டை மாடி போட்டோ சூட் நடந்திருக்கிறது. ‘மொட்டை மாடி புகழ்பெற்றதா…. என்ற ஜனகராஜ் காலத்து ஜோக்கெல்லாம் அடிக்கக்கூடாது) எமோஷனாகச் சொல்லும் கதையைக்கூட இயல்பாகச் சொல்லி வணக்கம் சொன்னார் ரம்யா.

மறுபடியும் ஓர் இடைவெளியாக ‘ஃபுட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது’ என விழிப்புணர்வு விளம்பரம் ஓட்டினார் பிக்பாஸ்.

நான் பொறந்தது எங்கேன்னா?

’திருச்சி ஜிஹெச்லதான் பிறந்தேன்’ என ஆஜிஸ் வந்த கதையை ஆரம்பித்ததும் ‘டேய் நீ பொறந்ததிலிருந்து சொல்லப்போறியா?’எனக் கலாய்த்தார்கள்.

இசை வாசனையே இல்லாத குடும்பத்தில் வந்தவர் எனச் சொல்லி, சூப்பர் சிங்கரில் பாட, அன்ரிசர்வ் பெட்டியில் வந்ததைச் சொன்னார் ஆஜிஸ். சின்ன பையனாக இருக்கும்போதே பெரிய மேடைகளைப் பார்த்தது உண்மைதான். ஆஜிஸ் சூப்பர் சிங்கர் டைட்டில் வின் பண்ணும் நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு முன், 3 படத்தில் வரும் ’போ நீ போ….’ பாடலை அந்த வயதில் பாடலின் ஃபீலைக் கொண்டு வந்து பாடியிருப்பார் அஜீஸ். அதற்கான பாராட்டுகளை அப்போதே பெரிய பாடகர்களிடம் பெற்றிருந்தார்.

அந்தப் புகழ் வெளிச்சம் எல்லாம் கொஞ்ச காலம்தானே. ஜித்தன் ரமேஷ் போல லைட்டிங் மேலே பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் வாய்ப்புகள் மங்கத் தொடங்கி, ஒரு நாளில் இருட்டியே விடும். பல ரியாலிட்டிகள் ஷோக்கள் நடக்கின்றன. வருஷத்துக்கு ஐந்தாறு பேர்கள் டைட்டில் வின்னர் ஆகிறார்கள். அவர்கள் ஒரு சுற்றுக்குப் பின் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது. அப்படித்தான் ஆஜிஸ்க்கு நடந்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு வர பிக்பாஸ் வந்திருக்கிறார். எங்களுக்காக தினம் பாட்டு பாடு கண்ணா!

’பாகுபலி’க்குள் பிதாமகன்

எல்லோரையும் உலுக்கும் கதையோடு வந்தார் பாலா. ‘பாகுபலி’ என கலாய் வாங்கி கொண்டிருந்தவருக்குள் இப்படி ஒரு கதை என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அப்பா – அம்மா இருவரும் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். சரியான உணவின்றி பள்ளிக்குச் சென்றதையும், லஞ்ச் என்பது மற்றவர்களின் கரிசனத்தாலும்தான் என்றபோது உடைந்துவிட்டார்.

’ஒழுங்கா குழந்தையை வளர்க்க முடியாதவங்க குழ்ந்தையை பெற்றுக்கொள்ளாதீங்க’ என்பதாகச் சொன்னார். அவ்வளவு வலி, அப்போது அவரின் குரலில். பேச ஆரம்பித்தபோது இருந்த சின்ன தயக்கம் உதிர்ந்துபோல மனம் திறந்து பேசினார். மிஸ்டர் இந்தியா வென்றதைக் கொண்டாடக்கூட வீட்டில் ஆள் இல்லை என்பதுபோல சோகம் என்ன இருக்கிறது. ’முகவரி’ படத்தில் ஒரு வசனம் வரும். நான் வெற்றியடைவதைப் பார்க்க என் குடும்பம் வேணும்’ என்று. ஆனால், வெற்றி அடைந்ததைப் பார்க்ககூட வரவில்லை என்பதை எப்படி எதிர்கொள்ள.

கோவாவில் நடந்த மிஸ்டர் இன்டர்நேஷனிலும் வென்று வந்தவரை வரவேற்க நண்பர்கள் இருந்ததே ஆறுதல். கூடுதல் நண்பர்களாக அவர் பேசி முடித்ததும் பிக்பாஸ் மேட்ஸ் கட்டிக்கொண்டார்கள்.

எல்லோரும் கதை சொல்லி முடிஞ்சிட்டிகளா… அப்பறம் ராமசாமி வரல… குப்புசாமி வரலனு கம்ப்ளைண்ட் பண்ணக்கூடாது எனக் கறார் குரலில். ‘கதை சொன்ன எட்டு பேரில் 4 பேரை செலக்ட் பண்ணுங்க’ என்றார். மீண்டும் குசுகுசு மீட்டிங் நடந்தது. முடிவாக, சுரேஷ், ஆஜிஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் நாமினேட் ஆனார்கள். ஏற்கெனவே நாமினேட் ஆன, ரேகா, ஷனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகியோரையும் சேர்த்து எட்டு பேரிலிருந்தே அடுத்த வாரம் எலிமேனஷனுக்கு செலக்ட் செய்யப்படுமாம். ஷிவானி முகத்தில் இப்போதே கவலை எட்டிப்பார்க்கத் தொடங்கி விட்டது.

’நாமினேஷனா… அது கிடக்குது ஒரு பக்கம்’ என சுரேஷ் படுத்துக்கொண்டே செலக்‌ஷன் கமிட்டியை கமெண்ட் செய்துகொண்டிருந்தார் ஆஜிஷைச் செலக்ட் பண்ணியிருக்கக்கூடாது என்றார். நியாயமான கருத்துதான். ‘சோகமான கதை’ அடிப்படையில்தான் என்றால் ஆஜிஸ்க்குப் பதில் ஜித்தன் ரமேஷைத் தேர்வு செய்திருக்கலாம்.

’அப்பாடா…. எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது’ என கல்யாணம் நடந்த வீட்டில் கிடைக்கிற இடத்தில் படுத்துகிடப்பதுபோல படுத்துக்கொண்டார்கள்.

அம்மா பாடல்

வெளியே கார்டன் ஏரியாவில், வேல்முருகன் ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு…’ என்ற கவிஞர் ஏகாதசி எழுதிய பாடலைப் பாடத் தொடங்கினார். கேமரா மேலிருந்து காட்சியைக் காட்டியது. இரவு. இருட்டு. லேசாக வெளிச்சம். புல்வெளி (செயற்கைதான்) வேல்முருகன் மடியில் ரியோ படித்திருக்கிறார். சில அடி தூரத்தில் அனிதா சம்பத் படுத்திருக்கிறார்.

வேல்முருகன் கேட்கும் மனத்தை உருக்கும் குரலில் பாடத் தொடங்குகிறார்.

அன்புள்ளம்  அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
யாருமில்லா நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்

அனிதா சம்பத் மெல்ல விசும்புகிறார். வேல்முருகன் பாட்டைத் தொடர்கிறார்.

”புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா….
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா..”

குரலில் அன்பை இழைத்து வேல்முருகன் பாடிக்கொண்டிருக்க, இனியும் தடுக்க முடியாது என உடைந்து அழுகிறார் அனிதா சம்பத். ரியோவும் வேல்முருகனும் பதறி ஓடி சமாதானப்படுத்துகிறார்கள்.

ஒரு பாடல் என்ன செய்யும். ஆழ்மனத்தில் உழலும் உணர்வுகளை மெல்ல மேலே எழுப்பும். அதைத்தான் வேல்முருகனின் பாடல் செய்தது. அந்தப் பாடலை நீங்கள் கேட்டாலும் அழுகை எட்டிப்பார்க்காமல் இருக்காது. பிக்பாஸின் கவித்துவமான காட்சியாக இது அமைந்தது. இன்னும் என்னென்ன காத்திருக்கிறதோ!

முந்தைய எபிசோட்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க:

01 யாரு ஓவியா… யாரு ஜூலி… யாரு கவின்… யாரு லாஸ்லியா? முதல்நாளிலேவா தேடுவீங்க? #BiggBoss4

02 ’உங்க வேலையை ஆரம்பிச்சிட்டீங்களே பிக்பாஸ்’ நாள் 2 – #BiggBoss4

03 பிக்பாஸில் முதல் அழுகையும் நிஷாவின் நிஜ ‘பிளாக்’ ஹியூமரும்! #BiggBoss4

04. நான் ஒண்ணும் சூப்பர் மாடல் இல்ல’ யாரை வம்புக்கு இழுக்கிறார் சம்யுதா! பிக்பாஸ் 3-ம் நாள் #BiggBoss4

05. அஜித் பாணியைப் பின்பற்றிய ’ஜித்தன்’ ரமேஷ்! பிக்பாஸ் 4-ம் நாள் #BiggBoss4

மாவட்ட செய்திகள்

Most Popular

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு...

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்...

“இந்த காலேஜ்ல என்னை தவிர எவன்கிட்டேயும் பேசக்கூடாதுடி” -மறுத்த மாணவிக்கு நேர்ந்த நிலை

தன் காதலி வேறொருவரிடம் நட்பு கொண்டதால் கோவப்பட்ட காதலன், அந்த காதலியை கொன்று ஒரு கால்வாயில் வீசியுள்ளார்.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு,...
TopTamilNews