குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்?

 

குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்?

‘பிரிக்க முடியாதது எது?’ என்று திருவிளையாடல் படக் கேள்வி – பதிலாகக் கேட்டால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான் வரும்… குழந்தைகளும் கார்ட்டூனும். விடுமுறை நாள் முழுவதும் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளே அதிகம். முன்பெல்லாம் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்போது டிவியில் தனக்குப் பிடித்த கார்ட்டூன் நிகழ்ச்சி வராவிட்டால் டக்கென்று மொபைலில் பார்க்கச் சென்று விடுகிறார்கள்.

குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்?

எப்படியாயினும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் குழந்தைகளும் நண்பர்களைப் போலாகிவிட்டனர். சின்சான், டோரா, ஜாக்கிசான், க்ருஷ், டோரிமான், சோட்டோ பீம்… என ஒவ்வொரு குழந்தையின் விருப்பமான கார்ட்டூன் கதைகள் மாறுபடும். ஆனால், தனக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் போலத் தன்னை நினைத்துக்கொள்வதும், அந்த நிகழ்ச்சியை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் மாறாது.

கார்ட்டூன் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் பெறும் பாசிட்டிவான விஷயங்கள் என்னென்ன… நெகட்டிவான விஷயங்கள் என்னென்ன்ன… என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்?

ப்ள்ஸ்:

1. முதல் விஷயம் அவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கில் நேரம் செலவழிக்கும் பழக்கம் உருவாகிறது. இதை அவர்கள் வளர வளர வேறொரு ஆக்கப்பூர்வமான விருப்பத்திற்கு மாற்றவும் அதில் அவர்கள் முழு நேரமும் செலவழிடச் செய்யவும் உதவியாக இருக்கும். அதற்குக் குழந்தைகளைப் பெற்றோர்களே தயார் செய்ய வேண்டும்.

2. புதிய சொற்களை அறிந்துகொள்வார். ஒரு புதிய சொல்லைக் குழந்தைகள் கற்க வேண்டும் எனில், அது ஒரு கதையின் ஊடாகவே சாத்தியம். கார்ட்டூன் சேனல் நிகழ்ச்சிகளின் வழியே பழகிய சொற்களின் இடையே பயன்படுத்தப்படும் புதிய சொல்லை அவர்கள் அர்த்தத்தோடு கற்றுக்கொள்கிறார்கள்.

3. ஒரு சாதனத்தை இயக்கப் பழகுகிறார்கள். டிவி அல்லது மொபைலில் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்க்க வேண்டும் எனில், தொடக்கத்தில் பெற்றோரின் உதவியை நாடுவார்கள். நாளடைவில் அவர்களாகவே அவற்றை இயக்கிப் பார்ப்பார்கள். ஏதேனும் ஓர் இடத்தில் தெரியவில்லை என்றால் பெற்றோர் எப்படி அதை இயக்குகிறார்கள் என்று உற்று கவனிப்பார்கள். அடுத்த முறையே அவர்களே அதைச் செய்துவிடுவார்கள். இப்படி ஒரு கருவியைப் பயன்படுத்த பழகுகிறார்கள்.

4. கார்ட்டூன்களில் நிறையத் தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்படுபவைதாம். அதனால், அந்தக் கதாபாத்திரங்கள் பேசுவது தமிழாக இருந்தாலும் சுற்றிலும் இருப்பவை வேறு நிலத்திற்கான காட்சிகள். பொருள்கள், மாறுபட்ட உடைகள் உள்ளிட்ட பல விஷயங்கள். குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதால் வேறொரு நிலத்தின் பண்பாட்டை, பொருட்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.

5. நண்பர்களுடன் பேச விஷயங்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் பள்ளி மற்றும் அக்கம் பக்கத்து நண்பர்களோடு பேசும் சூழல் ஏற்பட்டால் அவர்கள் பெரும்பாலும் தாங்கள் பார்க்கும் கார்ட்டூன் கேரக்டர்களைப் பற்றியே பேசுகிறார்கள். வேறெதுவும் பேசுவமளவு நடப்புகள் குழந்தைகளுக்குத் தெரியாது அல்லவா.. எப்படியாகினும், மற்றவர்களோடு இயல்பாகப் பேசும் திறனைக் கொடுக்கிறது கார்ட்டூன் கேரக்டர்கள்.

குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்?

மைனஸ்:

1. ஒரு கதையைப் புத்தகத்தில் படித்தால் கதை நடக்கும் இடம், கதாபாத்திரங்களைக் குழந்தைகள் மனதிற்குள் கற்பனை செய்துகொள்வார்கள். உதாரணமாக, கதையில் ஒரு பாட்டி வருகிறார் என்றால் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனக்குப் பிடித்த பாட்டியைக் கற்பனை செய்துகொள்வார்கள். கார்ட்டூன் தொடரில், அதை உருவாக்கும் நபரின் சிந்தனையில் உள்ள பாட்டியைத்தான் குழந்தைகள் காணவேண்டியிருக்கும். எதிர்காலத்தில் குழந்தைகள் சுயமாகச் சிந்திப்பதில் பெரும் சிக்கலை இது ஏற்படுத்தக்கூடும்.

2. கார்ட்டூன் நிகழ்ச்சியை டிவி அல்லது மொபைலில் நீண்ட நேரம் பார்க்கும்போது குழந்தைகளுக்குக் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம். அதுவும் பல குழந்தைகள் மொபைலை கண்களுக்கு மிக அருகில் வைத்துப்பார்க்கிறார்கள். அதனால் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட கண் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

3. ரொம்பவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்படும் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் குழந்தைகளைக் கட்டுப்போட்டுவிடுகின்றன. அதனால் வெளியில் சென்று ஓடி,ஆடி விளையாடுவது என்பது குறைந்துவிட்டது. அதனால் உடல் இயக்கமும் குறைந்து உடல் பருமன் போன்ற பிரச்னைகளும் வருகின்றன.

4. கார்ட்டூன் நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரங்களில் காட்டப்படும் ஜங் ஃபுட் குழந்தைகளை வசீகரித்துவிடுகின்றன. அதனால், அவற்றைக் கேட்டு பெற்றோரை நச்சரிக்கின்றனர். சரி, எப்போதாவது ஒருமுறைதானே என்று பெற்றோரும் வாங்கித் தருகின்றனர். நாளடைவில் தினமும் ஜங் ஃபுட் குழந்தைகளின் உணவில் கலந்துவிடுகிறது. அதனால் செரிமானப் பிரச்னையில் தொடங்கிப் பல சிக்கல்களை உருவாக்கி விடுகிறது.

5. எப்போதுமே டிவி அல்லது மொபைலில் மூழ்கியிருப்பதால் வீட்டில் உள்ளவர்களோடு பேசும் நேரம் குறைந்துவிடுகிறது. கார்ட்டூன் தொடர் வழியே தேவையில்லாத விஷயங்களைக் கற்றுக்கொள்வது நடக்கிறது. அதனால் குழந்தைகள் அந்தந்த வயதுக்கு உரியவற்றைச் செய்யாமல் அதிகப்படியான விஷயங்களைச் செய்கிறார்கள். இது அவர்களின் இயல்பான வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.