திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில், இன்று மாலை தெப்ப திருவிழா!

 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில், இன்று மாலை தெப்ப திருவிழா!

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில் பங்குனி உத்திர தெப்ப திருவிழா இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

திருச்சி நகரில் உள்ள மலைக்கோட்டையில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானவ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு திசை நோக்கி சிவலிங்க வடிவில் எழுந்தருளி உள்ளார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்தரத்திற்கு முந்தைய நாள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில், இன்று மாலை தெப்ப திருவிழா!

இதனையொட்டி, நாள்தோறும் இரவு சுவாமி மற்றும் அம்பாளுக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகமும், புறப்பாடும் நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை மீதுள்ள கோயில் கோபுரம் மற்றும் தெப்பக்குளத்தின் மையத்தில் அமைந்துள்ள நிராழி மண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளி வீசி வருகிறது.

இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் தலைமையில் கோயில் உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தெப்ப உற்சவத்தையொட்டி, திருச்சி மலைக்கோட்டை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.