’கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அறப்போட்டம்!

 

’கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அறப்போட்டம்!

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் வரும் வியாழனன்று அறவழி கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாகப் பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சேனலை இஸ்லாமியர் நடத்துவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

’கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அறப்போட்டம்!

இதுதொடர்பாக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இந்து மதத்தையும் நம்பிக்கைகளையும் ’கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் கேலி கிண்டல் செய்து தரக்குறைவாக பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செயலில் ஈடுபட்டவர்களை தேச விரோத மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாஜகவினர் வியாழனன்று போராட்டம் நடத்த வேண்டும் என எல்.முருகன் கூறியுள்ளார்.

காலை 10:30 மணிக்கு முருகப்பெருமான் படத்துடனும் கொடியுடனும் அவரவர் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்த வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த அறப்போராட்டத்தில் முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.