கோவில்பட்டியில் கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை… ரயில்வே ஊழியர் உட்பட 2 பேர் கைது…

 

கோவில்பட்டியில் கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை… ரயில்வே ஊழியர் உட்பட 2 பேர் கைது…

தூத்துக்குடி

கோயில்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் கடிதம் எழுதிவைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரயில்வே ஊழியர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சாருகேஷ் என்ற மகனும், பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை உள்ளது. சுரேஷ், கோயில்பட்டி லாயல் மில் பகுதியில் உள்ள ஆயில் விதை கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும், பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.

கோவில்பட்டியில் கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை… ரயில்வே ஊழியர் உட்பட 2 பேர் கைது…

இதனிடையே, தொழில் தொடர்பாக அவர் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் மகாராஜன் உள்ளிட்டோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால் பணத்திற்கு முறையாக வட்டி செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

தகவல் அறிந்த கோயில்பட்டி டிஎஸ்பி கதிரவன் தலைமையில், கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு சுரேஷ் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மகாராஜன், மனோஜ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும், சண்முகதுரை என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.