×

’OBC இடஒதுக்கிட்டை இல்லாமல் செய்யும் வேலை நடக்கிறது’ மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கொரோனா கால நடவடிக்கை, இடஒதுக்கீடு வழக்கு, சமூக ஊடகங்களில் திமுக மீது அவதுறு… எனப் பல்வேறு செய்திகளை இணைத்து கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்திலிருது சில பகுதிகள்… இந்தியாவில் 10 லட்சத்தைக் கடந்துள்ள நோய்த் தொற்று, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டரை லட்சத்திற்கும் மேலானவர்களைப் பாதித்துள்ளது என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்திருப்பதுடன், நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனாவால் பாதிக்கப்படுவது என்பது இந்தியாவுக்கு மோசமான அறிகுறியாகவே
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு கொரோனா கால நடவடிக்கை, இடஒதுக்கீடு வழக்கு, சமூக ஊடகங்களில் திமுக மீது அவதுறு… எனப் பல்வேறு செய்திகளை இணைத்து கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்திலிருது சில பகுதிகள்…

இந்தியாவில் 10 லட்சத்தைக் கடந்துள்ள நோய்த் தொற்று, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டரை  லட்சத்திற்கும் மேலானவர்களைப் பாதித்துள்ளது என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்திருப்பதுடன், நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனாவால் பாதிக்கப்படுவது என்பது இந்தியாவுக்கு மோசமான அறிகுறியாகவே தெரிகிறது. இது, சமூகப் பரவல் கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம் என்பதைக் காட்டுகிறது” என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளார் IMA (Hospital Board of India) தலைவர் டாக்டர் வி.கே.மோங்கா.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக மாறியிருப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டைவிட கேரளாவில் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவு. கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகம். அப்படியிருந்தும், அங்கே சமூகப்  பரவல் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த அரசு இயங்குகிறது.

தமிழ்நாட்டிலோ, எல்லாவற்றையும் மூடிமறைத்து – மக்களுக்கு மட்டுமின்றி முன்கள வீரர்களான மருத்துவத்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி – கொரோனா காலத்திலும் கொள்ளை அடிப்பதையே குறியாகக்  கொண்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சீனாவைவிடச் சென்னையில் நோய்த்தொற்று அதிகம் எனப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தினாலும், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்களுக்கே கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டாலும் முதலமைச்சர் பழனிசாமி, “தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை. கொரோனா விரைவில் ஒழிந்துவிடும்” என்பதை மட்டுமே ‘கீறல் விழுந்த கிராம்போன் ரெக்கார்டு’ போல, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு என்கிற எண்ணிக்கைக்கு வந்துவிட்டது. நோய்த்தொற்றால் மக்களிடம் அச்ச உணர்வு அதிகரித்து, ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறையற்ற ஆட்சியாளர்கள் வாய்க்கப் பெற்றுள்ள தமிழகத்தில், மக்களுக்கான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்வதை இந்தக் கொரோனா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் உணர்ந்திடும் வகையில்,  ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தின் மூலம் பசித்துயர் நீக்கி – பாதுகாப்பு சாதனங்களை வழங்கி தன் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டதை நாடும் ஏடும் போற்றின. இன்னமும் பல இடங்களிலும் கழகத்தினரின் உதவும் கரங்கள்  மக்களின் துயர் துடைத்து வருகின்றன. அவற்றை அன்றாடம் நடைபெறும் காணொலிச் சந்திப்புகள் வாயிலாக அறிந்து மகிழ்ந்து வருகிறேன். உங்கள் திருமுகம் காணும்போது நான் உவகை கொள்கிறேன்.

நேற்று காணொலியில் உரையாடிய ஓர் உடன்பிறப்பு, இன்று நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் எனச் செய்தி வரும்போது நெஞ்சம் பதறுகிறது. உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவிப்பதுடன், அவர்களின் குடும்பத்தாரிடமும் பேசி, அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் நாள்தோறும் பேசி நலன் தெரிந்துகொள்வதையே முதன்மையான  பணியாகக் கொண்டிருக்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 19 ஒரு நாளில் மட்டும் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ராணிப்பேட்டை காந்தி, வேலூர் கார்த்திகேயன் எனக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அறிந்ததும் வேதனையும் மனச்சோர்வும் அதிகமானது. என்ன செய்வதென்று அறியாமல், எனது அறையிலிருந்த தலைவர் கலைஞர் அவர்களின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எத்தனையோ சோதனைகளை – மேடு பள்ளங்களை தீரத்துடன் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை வளர்த்தவராயிற்றே.. அந்த வலிமையில் கொஞ்சம், ஓர் குன்றிமணி அளவேனும் தாருங்கள் தலைவரே..” என்று மனதளவில் இரவல் கேட்டு வாங்கி, துணிவைத் துணையாக்கிக் கொண்டு மூவரையும் தொடர்புகொண்டு நலன் விசாரித்தேன். மருத்துவர்களிடம் பேசி, சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். எப்போதும்போல் கழகம் துணை நிற்கும் என்ற உறுதியினையும் நம்பிக்கையினையும் வழங்கினேன்.

2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மேற்கொண்ட ஒருங்கிணைப்பு முயற்சியும் அதனால் கிடைத்த வெற்றியும், தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையையும் திரும்பிடச் செய்தது. இதனை உரக்கச் சொல்ல ஊடகங்கள் தயங்கலாம். ஆனால், உண்மை என்ன என்பதை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் தெளிவாகவே அறிந்திருக்கிறார்கள். தி.மு.கழகத்தின் செல்வாக்கு, மக்களுக்காக அது சந்திக்கின்ற களங்கள், மக்கள் அதன் மீது வைத்திருக்கிற நம்பிக்கை இவையனைத்தும் நாளுக்கு நாள் பெருகி வருவதை ஆட்சியாளர்கள் அறிவார்கள். உளவுத்துறையினர் அதற்காகத்தானே இருக்கிறார்கள்!

ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை ஓர் இயக்கம் பெறுவதும், அதனைத் தக்க வைத்துக்கொள்வதும் சாதாரணமானதல்ல!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது  அவதூறுகளை அள்ளி வீசி, கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி, இல்லாத காரணங்களை முன்வைத்து, பொல்லாத பழிகளைச் சுமத்தி நம்மை வீழ்த்திடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.

தந்தை பெரியார் முன்வைத்த சமூகநீதி – சுயமரியாதைக் கொள்கையை தேர்தல் ஜனநாயக அரசியல் வழியில் அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதே பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் தி.மு.கழகத்திற்கு வெறுப்பு  கிடையாது. பல மதத்தினரும் திமுகழகத்தில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் – சாதி மறந்து!

யாருக்கும் சாதிப் பகை வளர்த்திடும் சகுனித்தனம் கூடாது. எவரது நம்பிக்கையிலும் பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை. அவரவர் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் குரல் உயர்த்தி – ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமரசமற்ற போராட்டம்தான் இந்தப் பேரியக்கத்தின் இலட்சியப் பாதை.

எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்.

பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்து மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்துக்கள் – கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைத்திடப் போராடுகிறது நமது இயக்கம். அதில் உயிர்பறிக்கப்பட்ட இந்துக்களைக் கொச்சைப்படுத்தியவர்கள்தான் நம்மை இந்து விரோதி என்று திசை திருப்பிடப் பார்க்கிறார்கள்.

எங்கோ – எதுவோ ஒன்று நடந்தாலும் அதனைத் தொடர்புபடுத்தி  தி.மு.கழகத்தின் மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள். மாநிலத்தை ஆளும் அடிமை ஆட்சியாளர்கள், தி.மு.க.,வை தமிழர்களின் எதிரியாக சித்தரிக்க நினைக்கும் திடீர் அரசியல் நகைச்சுவையாளர்கள் என அவர்களின் கூட்டத்தில் எடுபிடிகள் ஏவல்செய்வோர் ஏராளமாக இருக்கிறார்கள். இந்தச் சமூக வலைதள யுகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கருத்துகள் எளிதில் சென்று சேர்வதால் அதனை கவனிக்கக்கூடிய கழகத்தினர் சிலர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் போக்குத் தெரிகிறது. அதனைக் கைவிடுங்கள். நகைச்சுவைத் துணுக்குகளாக நினைத்துப் புறந்தள்ளுங்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.கழகத்திற்கு பெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்கள் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றத்தை! அதனை ஜனநாயக வழியிலான தேர்தல் வாயிலாக நிறைவேற்றிட வேண்டும் என்பதில் தி.மு.கழகம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள மாபெரும் இயக்கமான தி.மு.கழகத்தின் வெற்றியைத் தடுத்திட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் சமூக வலைதளங்களிலும் பிற வழிகளிலும் திசைதிருப்பும் சதிவேலைகள் தொடர்கின்றன. அவற்றிற்கு மயங்கிடாமல், நம் இலக்கு நோக்கித் தெளிவான – திடமான பயணத்தை மேற்கொள்வோம்.

அதற்கேற்ப, இந்தக் கொரோனா காலத்தில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தி, குடும்பத்தினரின் நலனில் கவனம் செலுத்தி, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து, பொதுப்பணியாற்றிட களத்திற்கு வாருங்கள்.