பணம் பறிக்கும் பாமக..அன்புமணியை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்

 
an

ஜெய்பீம்  படத்தில் வன்னிய சமூகத்தினரை அவமதிக்கின்ற வகையில்   காட்சி அமைத்து இருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி இருந்த நிலையில்,  படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.   ஆனாலும்  மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ .குருவின் பெயர் திட்டமிட்டு படத்தில் அந்த போலீசுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

  சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் தொடர் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில்,   மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால்,  படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறிவிட்டனர்.  அந்த திரையரங்க உரிமையாளரும் வேல் படத்தை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிட்டுள்ளார்.

am

  சூர்யா மயிலாடுதுறைக்கு வந்தால் அவரை எட்டி உதைக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் பாமக மாவட்ட  தலைவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெ. குருவை அவமதித்த விட்டதாக சொல்லி சூர்யாவின் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்று சொல்லியிருக்கிறார் ஜெ.குருவின் மருமகன்.  மேலும்,  ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யா 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி  நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


சூர்யா இதற்கெல்லாம் அஞ்சாமல் இருப்பதால்,  அவரது ரசிகர்கள் #WeStandWithSuriya என்ற  ஹேஷ்டேக்கினை  டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரத்தில்,  5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பதால் #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.


 சூர்யாவுக்கு ஆதரவாக விசிக திருமாவளவன், சிபிஎம் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,  ‘’ஜெய்பீம் மனசாட்சியை உலுக்கும் ஒரு மகத்தான திரைக்காவியம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு சமூக அநீதியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆட்சியாளர் உள்ளிட்ட பலரையும் செயல்பட தூண்டியிருப்பதில் உள்ளது அதன் மாபெரும் வெற்றி.   அரசியலின் பெயரால் இம்மாதிரியான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் முடிந்துவிட்டது. சூர்யாவை  அச்சுறுத்துவதை  எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைபடைப்புகளை ஒரு சமூகமாக நாம் திறந்தமனதோடு எதிர்கொள்ளவெண்டும்.  நல்ல படைப்புகளை ஊக்குவிக்கவேண்டும்.   இந்த நேரத்தில் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரோடு நிற்பது நமது கடமை’’ என்று தெரிவித்திருக்கிறார்.