ராஜேந்திரபாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது - தமிழக காவல்துறைக்கு உத்தரவு

 
rab

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 தமிழக அரசின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி.   இவர் அமைச்சராக இருந்தபோது ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சொல்லி மூன்று கோடி ரூபாய் பணம் பெற்றும்,  சொன்னபடி பணி வழங்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக  பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு  பதிவு செய்யப்பட்டது.

 இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க கே. டி . ராஜேந்திர பாலாஜி,  என். பாபுராய்,  பி.எஸ். பலராமன்,  எஸ். கே. முத்துபாண்டியன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.  

hr

 அந்த முன்ஜாமீன் கோரிய மனுவில்,   தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் மீது பண மோசடி உள்ளிட்ட புகார்கள் இருக்கின்றன.  தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்த  பொய் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

 இந்த முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியதோடு மட்டுமல்லாமல் கொலைமுயற்சி குற்றச்சாட்டும் உள்ளது.    ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இதை அடுத்து இடையீட்டு மனுதாரர் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.  அதுவரைக்கும் ராஜேந்திரபாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.