வேலைக்கு செல்லாத கணவர்… வறுமையால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து, இளம்பெண் தற்கொலை!

 

வேலைக்கு செல்லாத கணவர்…  வறுமையால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து, இளம்பெண் தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை அடுத்த வில்லுபத்திரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி(33). கட்டிட தொழிலாளி. இவருக்கும், செங்கோட்டையை சேர்ந்த திருமலைசெல்விக்கும் (26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவ்யா (5), காவ்யா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பாண்டி குடும்பத்துடன், குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த பாண்டி, கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால், குடும்ப செலவுக்கு பணமின்றி திருமலைச்செல்வி தவித்து வந்துள்ளார். இதுகுறித்து, பலமுறை கூறியும் பாண்டி கண்டுகொள்ள வில்லை. நேற்று காலை மீண்டும் பாண்டி வேலைக்கு செல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், பாண்டி வெளியே சென்ற நிலையில், திருமலைச்செல்வி தனது 2 மகள்களுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

வேலைக்கு செல்லாத கணவர்…  வறுமையால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து, இளம்பெண் தற்கொலை!

சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த பாண்டி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தார். இதில், குழந்தைகள் உயிர் பிழைத்தனர். ஆனால், திருமலைச்செல்விக்கு மயக்கம் தெளியாததால், அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார், திருமலைசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பொறுப்பு கோட்டாட்சியர் சொர்ணராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.