ராஜேந்திரபாலாஜி எங்கே? என்று கேட்டு குடும்பத்தினரை தொந்தரவு செய்ய தடை

 
tr

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி ,பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரு வேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது .  ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனு நேற்று தள்ளுபடி ஆனது.  இதை அடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவருகிறார்கள் என்று தகவல் வெளியானது.

ktr

அதன்பின்னர்  மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தம் 6 தனிப்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  முன் ஜாமின் கிடைக்க வில்லை என்றதுமே அவர் பெங்களூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ராஜேந்திரபாலாஜி எங்கே இருக்கிறார் என்று கேட்டு தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில்,  ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதை விசாரிப்பதற்காக அவரின் சகோதரி மகன்களான ரமணா வசந்தகுமார் ஆகியோரையும் அவரது டிரைவர் ராஜ்குமார் திருத்தங்கள் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

இதனால், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், ராஜேந்திரபாலாஜியை தேடும் முயற்சியில் குடும்பத்தினரை தொந்தரவு செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி,    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள்; விசாரணை செய்யுங்கள்.  அவரது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.