பிச்சை எடுத்தாவது கொடுப்போம் - உணர்ச்சிவசப்பட்ட அண்ணாமலை

 
a

 தஞ்சை மாணவி லாவண்யாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகள் எச். ராஜா,  சி.பி. ராதாகிருஷ்ணன்,  நயினார் நாகேந்திரன்,   துரைசாமி,  குஷ்பு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

aa

போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் திராணி இருந்தால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி காட்டுங்கள் என்று சவால் விடுத்தார்.  

 அவர் மேலும்,   எதிர்க்கட்சியாக இருந்தபோது எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறிய அவர்,  தற்போது இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தயங்குவதேன்? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றினால் அதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பேச மாட்டோம் என்றார்.

 லாவண்யா விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் என்னை பொருத்தவரைக்கும் திமுக அரசுக்கு வாக்களித்த மக்கள் தான் என குற்றம்சாட்டினார் அண்ணாமலை.

 லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை விடமாட்டோம் என்று உறுதியாகச் சொன்ன அண்ணாமலை,  லாவண்யா குடும்பத்திற்கும் பாஜக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்குகிறோம்.   தமிழக அரசு மீதம் 90 லட்சம் ரூபாயினை வழங்க வேண்டும்.   இல்லையென்றால் தமிழக மக்களிடம் பிச்சை எடுத்து உண்டியல் குலுக்கியாவது 90 லட்சம் ரூபாயினை பாஜக சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.