''எங்களுக்கு அதிமுகவை அபகரிக்க வேண்டிய அவசியமில்லை''
மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக சசிகலா தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்கிற பதவியை நிரந்தரமாக நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை கொண்டு வந்திருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் . இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான். சசிகலா , தினகரனை கட்சியில் சேர்ப்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே!’’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘’சபாஷ் சகோதரி, உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி! பாஜக என்பது 16 கோடி தொண்டனின் கட்சி. இங்கு அனைவரின் கூட்டுத் தலைமை காங்கிரஸ் மாதிரி, நேரு-இந்திரா - சோனியா குடும்ப சொத்தல்ல. உரிமையாளர் கட்சியும் அல்ல. எங்களுக்கு எந்த கட்சியையும் அபகரிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.