விஜயகாந்த் உடல்நிலை... பிரேமலதா கண்ணீர்

 
vv

 அறுவை சிகிச்சைக்குப் பின்னர் விஜயகாந்த் வீட்டிற்குள்ளேயே ஓய்வெடுத்து வருகிறார்.  அவ்வப்போது நிர்வாகிகள் கூட்டத்திற்கு மட்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்து மாவட்ட செயலாளர்களுக்கு முன்பாக நின்று  சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போவார்.  தற்போது அதுவும் கூட இல்லை அவர்.  வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

p

 இந்த நிலையில் விஜயகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வர,  அவரது தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தார்கள்.  ஆனாலும் அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்த் திரைப்படங்களில் நடிப்பதும்,  கட்சியினுடைய செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இயலாத காரியம் என்று தெரிந்ததால் கட்சியினர் அணி தாவி வருகின்றனர்.  இந்த நேரத்தில் கட்சியை தக்க வைக்க ,  அதே நேரத்தில் உள்ளதை உள்ளபடியே அவரது மனைவி பிரேமலதா உருக்கமுடன் பேசியிருக்கிறார்.

 தேமுதிகவில்  பிரேமலதா ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி திமுகவுக்கு சென்று விட்டார்கள்.  சிலர் அதிமுகவிற்கு சென்றுவிட்டார்கள்.  மிச்சமிருக்கும் நிர்வாகிகளும் திமுகவுக்கு தாவிக் கொண்டிருக்கிறார்கள்.   இப்படியே போனால் தேமுதிகவின் எதிர்காலம் என்னாவது?   நிலைமை மோசமாகி விடும் என்பதை உணர்ந்த பிரேமலதா விஜயகாந்த்,  கடந்த 6ஆம் தேதியன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.  விஜயகாந்தின் உடல்நிலை,   பிரேமலதாவும் மீதான அதிருப்தியினால் மாவட்ட செயலாளர்கள் பலரும் கூட்டத்திற்கு  வரவில்லையாம்.

vv

 வந்திருந்த மாவட்ட செயலாளர்கள் உற்சாகம் இல்லாமல்  அமர்ந்து இருந்திருக்கிறார்கள்.  இதை உணர்ந்துகொண்ட பிரேமலதா,  கட்சியின் எதிர்காலம் குறித்து அவர்களுடன் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.   விஜயகாந்தின் உடல்நிலை இந்த அளவிற்கு மோசமானதற்கு காரணம் பிரேமலதாதான் அவரை சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டார் என்று கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  அதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் பிரேமலதா.

கேப்டனை நான் கண்டு கொள்ளவில்லை என்றும்,  சரியாக கவனிக்கவில்லை என்றும் நம் கட்சியிலேயே சில பேர் பேசுகிறார்கள்.  உங்களுக்கு அவர் கட்சியின் தலைவர். ஆனால் எனக்கு அவர் குடும்பத் தலைவர்.  என் வாழ்க்கையின் தலைவரே அவர்தான்.  அப்படி இருக்கும்போது கேப்டனை நான் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வேறு யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.  நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு அவரை பார்த்து வருகிறேன் என்று உங்களுக்கு தெரியாது.  வேறு ஒருவராக இருந்திருந்தால் எப்போதோ விட்டுவிட்டுப் போய் இருப்பார்கள் என்று கண்கலங்கி இருக்கிறார்.

ca

மேலும்,   கேப்டனுக்கு கிட்னி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.   பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது .  மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று செயல் இழந்துவிட்டதாகவும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.   இதனால் ஒவ்வொரு நாளும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம்.  இன்றைக்கு சரியாகிவிடும் நாளைக்கு சரியாகிவிடும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் சொல்லிக்கொண்டே அவர் கண்ணீர் வடிக்க,   மேடையில் இருந்த மற்றவர்களும்,  கழக மாவட்டச் செயலாளர்கள் அத்தனைபேரும் கண்கலங்கி விட்டார்களாம்.

அதிருப்தியில் இருந்த மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் உடனே எழுந்து வந்து,  அண்ணி நாங்கள் உங்களுக்கு பின்னால் இருக்கிறோம்.  நீங்கள் தலைவராக இருங்கள். உங்கள் பின்னாடி நாங்க இருப்போம்; கவலைப்படாதீர்கள் என்று உறுதியளித்திருக்கிறார்களாம்.  இதனால்,  விரைவில் தேமுதிகவின் பொதுக்குழுவை கூட்டி பிரேமலதாவை தலைவராகவும் விஜயகாந்தை கவுரவ தலைவராகவும் தேர்வு செய்திருப்பதாக  தகவல்.