மணியிடம் விடிய விடிய விசாரணை - போலீஸ் வாகனத்திலேயே வைத்து இரவு முழுவதும் சுற்றியது ஏன்?

 
m

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக இருந்தபோது சேலத்தில் அவரது அலுவலக உதவியாளராக இருந்தவர் மணி.   எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆன பின்னரும் கூட அவரின் தனி உதவியாளராக   இருந்து வந்தவர் மணி. 

 இந்நிலையில் அதிமுகவின் தோல்விக்கு பிறகு மணியிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று  புகார்கள் வெளிவரத் தொடங்கின. கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் தான் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் மணி மீது கடந்த அக்டோபர் மாதம் புகார் கொடுத்திருந்தார்.

 அந்த புகாரில்,  எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி முதல்வரின் உதவியாளர் மணி  17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார்.   இந்த புகாரின் அடிப்படையில் மணி அவரது நண்பர் செல்வகுமார் ஆகியோர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. 

mm

அந்த புகாரையடுத்து மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் அவரை நெருக்க தொடங்கிவிட்டார்கள்.  வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்றால் நாங்களும் புகார் செய்வோம் என்று மணியை எச்சரித்து வந்திருக்கிறார்கள்.  இந்த எச்சரிக்கையையினால்   சிலரிடம் முழுப்பணத்தையும் கொடுக்காவிட்டாலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார் மணி.   கொஞ்சம் டைம் கொடுத்தால் மீத பணத்தையும் கொடுத்து விடுவதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த முன்ஜாமீன் மனுவை நவம்பர் 1ஆம் தேதி தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.   இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.   முன்ஜாமீன் மனு நவம்பர் 14ஆம் தேதியன்று தள்ளுபடியானது.   இவர் மீது வழக்கு தொடரப்பட்ட நாள்முதல் தலைமறைவாக இருந்து வருகிறார்.   இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.   போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர்.   நேற்று முன் தினம் இரவு சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையம்பட்டி பகுதியில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார் மணி.

 எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவியாளராக வருவதற்கு முன்பு 100 ரூபாய்க்கே கஷ்டப்பட்ட மணிக்கு இப்போது சில நூறு கோடிகள் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.    இந்த சொத்துக்கள் எல்லாம் எப்படி சேர்ந்தன என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.

e

இருபத்தி எட்டாம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக சொன்னாலும்,  27ஆம் தேதி இரவிலேயே மணியை சென்று கைது செய்யும்படி மேலிடத்திலிருந்து தகவல் போயிருக்கிறது.   தீவட்டிப்பட்டி போலீசார் தான் இரவிலேயே சென்று மணியை கைது செய்திருக்கிறார்கள்.    இரவு முழுவதும் கைது செய்யப்பட்ட அவரை போலீஸ் வாகனத்திலேயே வைத்துக்கொண்டு சுற்றி இருக்கிறார்கள்.   அப்போது எடப்பாடி இடம் எப்பொழுது வேலைக்கு சேர்ந்தீர்கள்?  எந்த வேலையெல்லாம் செய்து வந்தீர்கள் ?  உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்?  எப்படி கொடுத்தார்?  என்றெல்லாம் போலீசார் துருவித் துருவி கேட்டிருக்கிறார்கள்.

 சில கேள்விகளுக்கு பதில் சொன்ன மணி,  பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மவுனம் சாதித்து இருக்கிறார்.

 தீவட்டிப்பட்டி போலீசார் எட்டாம் தேதி காலை 8 மணிக்கு கைது செய்து விட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.   நேற்றிரவு சேலம்  நீதிபதி முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.   அவர் ஆத்தூர் கிளைச்சிறையில் போலீசார் அழைத்துச் சென்றனர்.  ஆனால் திடீரென்று திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். 

ஆத்தூர் சிறையில் அடைத்தால் எடப்பாடி தன் செல்வாக்கை பயன்படுத்தி உதவக்கூடும் என்ற திருச்சி மத்திய சிறையில் கொண்டு வைத்து விட்டதாக  போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.