வைகோ, திருமா மீது ஸ்டாலினுக்கு வந்த சந்தேகம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சந்தித்துப் பேசியது, மக்களின் நலன் தொடர்பான சில கோரிக்கைகளை முன் வைத்ததாக அவர் தெரிவித்திருந்தார். அதேபோல கடந்த டிசம்பர் 3ஆம் தேதி என்று மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான வைகோ நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார். அவரும் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக நிர்மலா சீதாராமன் சந்தித்ததாக சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் திருமாவளவன், வைகோ இருவரும் அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்து இருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறதாம் திமுக. மதிமுகவில் இருந்து 17 மாவட்ட செயலாளர்கள் திமுகவிற்கு செல்லவிருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
பொதுவாகவே மத்திய அமைச்சர்களை சந்திக்கும்போது, ஒரு கோரிக்கை விசயமாக சந்தித்தோம் என்று வெளியே சொல்லிவிட்டு உள்ளே அரசியல் பேசப்படுவது இயல்புதான். அப்படித்தான் வைகோ, திருமாவளவன் சந்திப்புகளும் நிகழ்ந்திருக்கும் என்று திமுக வட்டாரத்தில் சந்தேகிக்கிறதாம் .

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் நடவடிக்கைகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். பாஜக எந்த திசையில் இருந்தும் நம்மை குறிவைக்க வாய்ப்பிருக்கிறது என்று திமுக எம்பிக்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறாராம்.


