உதயநிதி பதவியேற்பு - துர்கா ஸ்டாலின் குறித்த தேதி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்கிற பேச்சை அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தொடங்கி வைத்ததற்கு பின்னால் துர்கா ஸ்டாலின் இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.
உதயநிதியை திடீரென்று அமைச்சராக்கினால் கட்சியின் சீனியர்கள் அப்செட் ஆகிவிடுவார்கள் என்றுதான் மெல்ல இந்த பேச்சை எடுத்து விட்டிருக்கிறார் அன்பில். அதன் பின்னர் திமுகவின் பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை வரவேற்கிறேன் என்று சொல்லி வருகிறார்கள்.

டி. ஆர். பாலு தன் மகன் ராஜாவுக்கு அமைச்சர் பதவி எதிர்பார்த்தும் கிடைக்கவில்லை. ஐ. பெரியசாமி, துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களுக்கும் தாங்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க வில்லை. இதையெல்லாம் சமாளித்து உதயநிதி ஸ்டாலினை கொண்டு வரவேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள்.
சீனியர்களை சமாதானப்படுத்தும் விதமாகத்தான், உதயநிதி ஸ்டாலினும் எனக்கு அமைச்சர் பொறுப்பு எல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம். தலைவரின் தொண்டனாகவே திமுகவில் இருப்பேன் என்று சொல்லி வந்தார். அடுத்த சில மாதங்களிலேயே திமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிவிட்டார். அப்படித்தான் தேர்தலில் போட்டியிடவில்லை வெற்றிக்கு பிரச்சாரம் மட்டுமே செய்வேன் என்று சொல்லி வந்தார். கடைசிய்ல் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகிவிட்டார். தற்போது அவர் அமைச்சர் பொறுப்பு எல்லாம் வேண்டாம் என்று சொன்னதையும் அப்படித்தான் பார்க்கிறார்கள் சீனியர்கள்.
தற்போது உதயநிதி நடித்து வரும் படங்கள் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அப்போதுதான் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைகிறது. அந்த நேரத்தில் ஓராண்டு நிறைவடையும் நாளில் உதயநிதியை அமைச்சராக்கிவிட திட்டமிட்டுத்தான் அதற்காக காய்களை நகர்த்தி வருகிறார் துர்கா ஸ்டாலின் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது திமுக வட்டாரத்தில்.


