இரண்டு முறை எம்.எல்.ஏ. - ஆனால் கடைசிவரைக்கும் வாடகை வீட்டில் இருந்து காலமானார் நன்மாறன்
முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன்(72) மூச்சுத்திணறல் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக நேற்று இரவு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிமாறனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து கடைசி வரைக்கும் வாடகை வீட்டில் இருந்து காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த தலைவர் நன்மாறன், 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மதுரை ஆரப்பாளையத்தில் தனது மனைவி சண்முகவள்ளியோடு வசித்து வந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ராஜசேகரன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தனக்கென்று குடியிருக்க சொந்த வீடு ஒன்றை ஒதுக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தனது மனைவியோடு நேரில் சென்று மனு கொடுத்திருந்தார். நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை. இதனால் மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன். ஆகவே மதுரை ராஜாகூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சொந்தவீடு ஒதுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்தன. ஆனால் அந்த உதவிகளை எல்லாம் அவர் மறுத்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் மூச்சுத்திணறல் காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கடைசி வரைக்கும் வாடகை வீட்டில் இருந்து காலமான அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரும், பிற கட்சியினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


