ஒன்றிய அரசின் 'ஆண்மை'யை காட்டச்சொல்லுங்கள் - திருமுருகன் காந்தி நெத்தியடி
அதிமுக எதிர்க் கட்சியாக இல்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்கமுடியவில்லை. நாலு பேர் இருந்தாலும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பாஜக தான் பேசுகிறது என்று பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தலைமை கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தாலும் அக்கட்சியின் தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர். பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த நான்கு சீட்டும் அதிமுகவின் தயவால் தான் கிடைத்தது. ஆண்மை இருந்தால் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டு பாருங்கள். தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டு அதற்கு அப்புறம் நாகேந்திரன் இப்படி பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் தவறாக பேசி விட்டதாக காவல் நிலையத்திலும் அதிமுகவினர் புகார் கொடுத்திருக்கின்றனர். நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து வருத்தம் தெரிவிப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் பேச லைன் கிடைக்காததால் அடுத்து அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி நயினார் நாகேந்திரன் ஏற்படுத்திய சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி இந்த விவகாரம் குறித்து, ’’அவ்வளவு தைரியம் பாஜகவிற்கு இருந்தால், சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அறிக்கை கொடுத்து ஒன்றிய அரசின் 'ஆண்மை'யை காட்டச்சொல்லுங்கள். மோடியை ஊடகங்களை சந்திக்க சொல்லுங்கள். ஊராட்சி தேர்தலில் கூட தேராத குப்பைகளை தூக்கிச்சுமந்த அதிமுகவினருக்கு இனிமேலாவது சுயமரியாதை உணர்ச்சி வருமா?’’ என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.