அவர்களுக்கு நிகர் அவர்கள்தான் - திமுக மீது எல்.முருகன் கடும் தாக்கு

 
bj

பாஜகவின் சமூகவலைத்தள ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கைது ஆனதால்  திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   அடுத்து நாம் தமிழர் கட்சியின் சீமான்,  திமுகவினருக்கு மேடையில் செருப்பை காட்டி கடுமையாக பதிலடி கொடுத்ததால், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் மேடை ஏறிய திமுகவினர் மைக்கை பிடுங்கி எறிந்து, நாற்காலியை தூக்கி அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

 கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர இப்படி அராஜக அரசியலில் இறங்க கூடாது என்று திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.   

m

 இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.  முருகன் இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசியபோது அவர் இதுகுறித்து தெரிவித்தார்.

 திமுகவுக்கு இது ஒரு வாடிக்கையான செயல் தான்.   திமுக இதை செய்யவில்லை என்றால் நாம் ஆச்சரியப்பட வேண்டும் .  கருத்து சுதந்திரத்தை பறிப்பது அவமதிப்பது எல்லாம் திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என்று சொன்னவர்,    ஒருவர் கருத்து சொல்கிறார் என்றால் அவரை கைது செய்கிறது திமுக .  அதே திமுக கட்சியினர் கருத்து சொல்லும் போது அமைதியாக இருக்கும் அரசு,  மாற்று கட்சியினர் கருத்து சொல்லும்போது மட்டும் அவர்களைத் தாக்குகிறது கைது செய்கிறது.  இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு சவாலாகத் தான் நான் பார்க்கிறேன் என்று வெடித்தார்.

 அவர் மேலும்,   திமுகவை சார்ந்தவர்கள் மற்றவர்களை தாக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.   கருத்து சுதந்திரம் விஷயத்தில் மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இது போன்று நிறைய நடக்கப்போகிறது அதை நாம் பார்க்கத்தான் போகிறோம் என்றார் .