இந்த விவகாரத்தில் இனியாவது எதிர்க்கட்சிகள்... பாஜகவின் அறிவிறுத்தல்

 
pm

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், ஏழை நாடுகளில் 10 கோடி தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டன. மிக குறைந்த 'காலாவதி நாட்கள்' கொண்ட தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக செலுத்த முடியாததால் அவற்றை படுகுழிக்குள் புதைத்து விடுகின்றன அந்நாடுகள் என்று சொல்லும் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,  தயாரிக்கும் தடுப்பூசிகளை 'பதுக்கி; வைத்து ஏழை நாடுகளுக்கு அனுப்பாமல், தங்கள் நாட்டிலும் துரிதமாக செலுத்தாமல், காலாவதியாவதற்கு  நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில், தேவைக்கும் மேலாக ஏழை நாடுகளுக்கு அனுப்பிய கொடூர செயலினாலேயே  இந்நிலை என்பது வருந்தத்தக்கது என்கிறார். 

போதிய குளிர்பதன வசதி இல்லாத நிலையில், திட்டமிடாத சூழ்நிலையில் சிக்கி திணறி தடுப்பூசிகளுக்காக ஏங்கி, காத்திருந்து அவைகளை பெறும்போது, அவற்றை செலுத்த முடியாத அவலநிலையில் உள்ளன பல நாடுகள். வளரும், வளர்ந்த நாடுகளின் இந்த எதேச்சதிகார போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சொல்லும் நாராயணன்,  ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளே அதிகமாக தடுப்பூசிகளை பதுக்கி ஏழை நாடுகளை வஞ்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார். 

na

இந்தியா கடந்த டிசம்பர் மாதம் வரையில்  இலவசமாகவும், வர்த்தக ரீதியிலாகவும், ஐக்கிய நாடுகளின்  கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாகவும் சுமார் 12 கோடி தடுப்பூசிகளை நூற்றைம்பது நாடுகளுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இது வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களில் முதல் தடுப்பூசியை  93 விழுக்காட்டினரும், இரண்டாவது தடுப்பூசியை சுமார் 50 விழுக்காட்டினரும் செலுத்தி கொண்டிருப்பது, திட்டமிட்ட ரீதியில் மக்கள் நலன் காக்க நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கொண்டுள்ள வேள்வியின் வெற்றியை பறைசாற்றுகிறது என்று சொல்லும் நாராயணன் திருப்பதி, 

ஆனால், துவக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளாலும், அரசியல் தலைவர்களாலும் தடுப்பூசி குறித்த தவறான, தரம் தாழ்ந்த விமர்சனங்களையும், அவதூறுகளையும், வதந்திகளையும் எதிர் கொண்டாலும் அமைதி காத்து, 
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
என்ற வள்ளுவன் வாக்குக்கேற்ப சான்றோனாக நிமிர்ந்து நிற்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்கிறார். 

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் தடுப்பூசிகளை தன் மக்களுக்கும் அளித்து, மற்ற நாட்டினருக்கும் உதவி செய்வதின் மூலம் உலகம் முழுவதற்கும் வழிகாட்டியாய், ஆபத்பாந்தவனாய், அனாதரட்சகனாய் இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அது நரேந்திர மோடி அவர்களின் தன்னலமில்லாத செயல்திட்டத்தினால் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த விவகாரத்தில் இனியாவது  எதிர்க்கட்சிகள் மலிவு அரசியல் செய்வதை கைவிட்டு பிரதமரின் செயலாற்றலை பாராட்டுவது சிறப்பை தரும் என்கிறார்.