ஜெயலலிதா பாராளுமன்றத்திற்கு சென்று வந்த கார் இப்போது..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் காட்சி பொருளாக வைக்கப்படுகிறது. அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வந்த கார்தான் காட்சி பொருளாகிறது.

கடந்த 1984ம் ஆண்டில் ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கினார் எம்.ஜிஆர். ஜெயலலிதா ராஜ்யசபா உறுப்பினராக இருந்தபோது டெல்லியில் தங்கியிருந்து பாராளுமன்றத்திற்கு சென்று வந்தார். அப்போது அவர் மாருதி -800 காரை பயன்படுத்தி வந்திருக்கிறார். பாராளுமன்றத்திற்கு இந்த காரில் தான் சென்று வந்திருக்கிறார். அதன்பின்னர் அவர் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் முதல்வர் ஆகிவிட்டார்.
டெல்லியில் ஜெயலலிதா பயன்படுத்திய கார் மைத்ரேயன் எம்.பியின் வீட்டில் இருந்திருக்கிறது. அவரது பதவிக்காலம் முடிந்தபின்னர் தம்பிதுரை எம்.பியின் பங்களாவில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.

இப்போது அந்த காரின் இருக்கைகள் படு மோசமாக உள்ளனவாம். ஸ்டீயரிங்கும் இல்லையாம். பேட்டரியும் இல்லையாம். வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இந்த கார் இருக்கிறது என்கிறார்கள்.
டெல்லியில் அதிமுகவுக்கு அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு அதிமுகவுக்கு அலுவலகம் கட்டப்பட்டு அது தயார் நிலையில் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் ஜெயலலிதா உபயோகித்த பொருட்களை வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில் இந்த மாருதி- 800 காரை புதிய அலுவலகத்தில் காட்சிப்பொருளாக வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.


