கடலூரில் பாமக -விசிகவினர் ஏற்படுத்திய பதற்றம்

 
pm pm

 பாமகவினரும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் நிலை இருந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.  பின்னர் அதிகாரிகள் அங்கு வந்து சமாதானப்படுத்தி பதட்டத்தை போக்கினர்.

 கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அடுத்த பாலூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடி கம்பத்தை நட ஏற்பாடு செய்து வந்தனர்.  இந்த தகவல் நடுவீரப்பட்டு போலீசாருக்கு செல்ல,  அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

pk

கொடிக்கம்பம் நடுவதை போலீசார் தடுத்தபோது விசிக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது பாமகவினர் அங்கே திரண்டு வந்து விசிக கொடிக்கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் இரு கட்சியினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.  

அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதை அடுத்து உடனே பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா,  கடலூர் ஆர்டிஓ அதியமான் கவியரசு,  வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   இந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் அனைத்து கட்சியினருக்கும் சம்மன் அனுப்பி சமாதான கூட்டம் போட்டு  விசிக கொடியை ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கோட்டாட்சியர் உறுதி கூறியதால் அனைவரும் அந்த இடத்தை விட்டுச் 
சென்றனர்.