40 நாட்கள் அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம் - காரணம் இதுதான்!

 
ட்ம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்காக 40 நாட்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.

 தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன.  இருபத்தி ஏழு மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது .  விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.  இதை அடுத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து பதிவுகளும் நிரப்பப்பட்டு விட்டன.  

 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 26-ஆம் தேதி வரைக்கும் அவகாசம் வழங்கியது.   இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.  இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 26ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் முறைப்படி அறிவிப்பை வெளியிட்டார். அதே நாளில் தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவுக்கு வந்தது.

சு

 இந்த நிலையில் தேர்தலை நடத்தி முடிக்க 40 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு கொடுத்திருக்கிறது. அரசியல் கட்சியினர் , சுயேட்சையாக போட்டியிட உள்ளவர்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர்,    தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்கவில்லை.  ஏற்கனவே தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.   அதன்படி தேர்தலை நடத்தி முடிக்க 40 நாட்கள் ஆகும்.  உச்சநீதிமன்றம் ஏற்கனவே விதித்த கெடு முடிந்ததால் 40 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறோம்.   இந்த வழக்கு விசாரணைக்கு வர இரண்டு வாரங்கள் ஆகும்.  அதற்குள் தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விடும் என்று தெரிவித்திருக்கிறார்.