’’தம்பி நீங்க சிறப்பா செயல்படுறீங்க... மகிழ்ச்சியா இருக்குது’’
உடல் நலம் குறித்து விசாரிக்கச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ’’தம்பி நீங்க சிறப்பா செயல்படுகிறீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று சொல்லி நெகிழ்ந்து இருக்கிறார் திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி.
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், திமுகவின் முன்னாள் பொருளாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமானவர் ஆற்காடு வீராசாமி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் வீடு திரும்பியிருக்கிறார்.
வீட்டிலும் மருத்துவமனையில் இருப்பது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வீட்டிலிருந்தபடியே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்காடு வீராசாமியின் உடல்நிலையை அவரது மகனும் வடசென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான கலாநிதி வீராசாமி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு ஆகியோருடன் நேரில் சென்று பார்த்து ஆற்காடு வீராசாமியை நலம் விசாரித்திருக்கிறார் .
அப்போது முதல்வரிடம் பேசிய ஆற்காடு வீராசாமி, ’’தம்பி நீங்க சிறப்பா செயல்படுறீங்க. மகிழ்ச்சியா இருக்குது’’என்று சொல்லியிருக்கிறார் . மேலும் கட்சியின் தற்போதைய சூழல் குறித்தும் பழைய நினைவுகள் குறித்து முதல்வரிடம் அமைச்சர்களிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆற்காடு வீராச்சாமியின் பேச்சில் நெகிழ்ந்து போயிருக்கிறார் முதல்வர்.