எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீச்சு
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா தான். ஆனால் அந்த சசிகலா அதிமுகவிற்குள் வரக்கூடாது என்று உறுதியாக இருப்பதும் எடப்பாடி பழனிசாமி தான். சசிகலா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அதிமுகவிற்குள் வர முடியாமல் இருக்கும் சூழ்நிலைக்கு எடப்பாடியும் நடவடிக்கைகள்தான் காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க விடாமல் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறது கட்சி வட்டாரம்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வு முடிந்து தனது இன்னோவா காரில் ஏறி நினைவிடத்தில் இருந்து வெளியே சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது காமராஜர் சாலையில் சசிகலா மற்றும் தினகரனை வரவேற்பதற்காக அங்கு அமமுகவினர் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் காரைப் பார்த்ததும் அவர்கள் ஆவேசமாக பாய்ந்து காரை முற்றுகையிட முயன்று முயன்றனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அமமுகவினர் அதிமுகவினர் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி இருவரின் காரும் விரைந்து செல்ல அனுமதித்தனர். அவர்கள் புறப்பட்ட பின்னரே சசிகலாவுக்கும் தினகரனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் தனித்தனியாக செனறு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


