தடாலடி - திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் ராஜேந்திரபாலாஜி
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராஜேந்திரபாலாஜி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக மூணு கோடி ரூபாய் பணமோசடி செய்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 20 நாட்களுக்குப் பின்னர் 20 மணி நேர விரட்டலுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனியார் காரில் அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி தமிழக எல்லையான அத்திப்பள்ளி என்கிற இடத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே தனிப்படை போலீசார் விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருக்கு உதவிய 4 பேர் என ஐந்து பேரையும் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் சென்றனர் . நள்ளிரவில் 1:15 மணி அளவில் விருதுநகருக்கு சென்றடைந்தனர். பின்னர் ராஜேந்திர பாலாஜியிடம் மதுரை சரக காவல்துறை டிஐஜி காமினி, மாவட்ட எஸ்பி மனோகரன் உள்ளிட்ட போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேந்திரபாலாஜியை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆனால் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர் திடீரென்று திருச்சி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். பாதுகாப்பு மற்றும் சிறை நிர்வாகத்தின் காரணம் கருதி அவரை மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு எடுத்ததாக தகவல்.