ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20வரை சிறை

 
r

 அரசு வேலை வாங்கித் தருவதாக மூணு கோடி ரூபாய் பணமோசடி செய்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 20 நாட்களுக்குப் பின்னர் 20 மணி நேர விரட்டலுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.   கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

 ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்க உதவிய கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.   கர்நாடக மாநிலத்தில் இருந்து தனியார் காரில் அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி தமிழக எல்லையான அத்திப்பள்ளி என்கிற இடத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே தனிப்படை போலீசார் விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

rab

 ராஜேந்திர பாலாஜி  மற்றும் அவருக்கு உதவிய 4 பேர் என ஐந்து பேரையும் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் சென்றனர் .  நள்ளிரவில் 1:15 மணி அளவில் விருதுநகருக்கு சென்றடைந்தனர்.    பின்னர் ராஜேந்திர பாலாஜியிடம் மதுரை சரக காவல்துறை டிஐஜி காமினி,  மாவட்ட எஸ்பி மனோகரன் உள்ளிட்ட போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

 விசாரணைக்கு பின்னர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதையடுத்து இன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

 விசாரணைக்கு பின்னர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.   இதையடுத்து சிறையில் அடைக்க ராஜேந்திரபாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.