அம்மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு..பாமகவின் இரு சக்கர பேரணி

 
p

2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சியைப் பிடித்து அரியணை ஏற வேண்டும்.  அன்புமணி முதல்வராக வேண்டும்.  அதற்கு பாடுபட  என்று தொடர்ந்து கட்சியினரை முடுக்கி விட்டு வருகிறார் ராமதாஸ். இதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  ஏற்கனவே உள்ள மாவட்ட செயலாளர்களும்,  புதிய மாவட்டச் செயலாளர்கள் மக்களை சந்திக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் ராமதாஸ்.

 சிறப்பாக செயல்படுவோருக்கு பாராட்டுக்களும் செயல்படாதவர்களுக்கு கண்டிப்பும் உறுதி என்று சொல்லியிருக்கிறார்.

மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக  பாமக இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்த வேண்டுமென்றும்,  ஒவ்வொரு ஒன்றியத்திலும்  உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு,  அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதுதான் இந்த இரு சக்கர வாகன பேரணி நோக்கமாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

pp

 நமது  கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒன்றியம் என்பது 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது ஆயிரம் பேர் இரு சக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நமது கொள்கைகளையும் சாதனைகளையும் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அங்குள்ள மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்டுவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.

ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தபட்சம்   ஆயிரம் பேராவது இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் தானே நேரில் வந்து பேரணியை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். 

 மாவட்ட செயலாளர்கள் உடன் ஒன்றிய செயலாளர்களும் இணைந்து இந்த பேரணியை மேற்கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இரு சக்கர ஊர்திப் பயணம் மேற்கொள்வோம்! இளைஞர் சக்தியை ஒன்று திரட்டுவோம்!!  மக்களை சந்திப்போம்.... அவர்களுடன் உரையாடுவோம்! மக்கள் ஆதரவை வெல்வோம்.... புதியதோர் தமிழகம் படைப்போம்  என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.  ராமதாசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இரு சக்கர பேரணிக்கு பாமகவினர் தயாராகி வருகின்றனர் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.