சுப்பராயலு முதல் மு.க. ஸ்டாலின் வரை ஒருவர்கூட.. ராமதாஸ் விரக்தி

 
pm

தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் சுப்பராயலு முதல் மு. க. ஸ்டாலின் வரை ஒருவர்கூட வன்னியர்கள் இல்லை.  இதற்குக் காரணம் வன்னியர்கள் எடுபிடி என்பதால்தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களிடையே விரக்தியை வெளிப்படுத்தினார்.

அடுத்து வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்,  2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்,  2026 வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பாமகவை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் ராமதாஸ்.   இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகள் இடையே ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

rms

 திருக்கோவிலூர்,  விக்கிரவாண்டி,  விழுப்புரத்தைச் சேர்ந்த பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது,    நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று கண்டிப்புடன் தெரிவித்து விட்டோம்.  அதனால்தான் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.  இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் என்று சிவி சண்முகத்திற்கு புகழாரம் சூட்டினார் ராமதாஸ் .

தொடர்ந்து பேசியவர்,   தமிழகத்தில் எந்த கட்சி தலைவர்களும் மக்களுக்காக இத்தனை அறிக்கையை வெளியிட்டு இருக்க மாட்டார்கள்.  மக்களுக்காக அதிக அறிக்கை வெளியிட்ட ஒரே கட்சி என்றால் அது பாமக என்று பெருமையுடன் சொன்னவர்,    தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் சுப்பராயலு முதல் மு.க. ஸ்டாலின் வரை ஒருவர் கூட வன்னியர் இல்லை.    இதற்கு காரணம் வன்னியர்கள் எடுபிடி என்பதால்தான் என்று தனது விரக்தியை தெரிவித்தார்.

pm333

அவர் மேலும் பேசியபோது,  தேர்தல் நேரத்தில் விளையாடுகின்ற பணத்தினால்தான் வன்னியர்கள் பாலாய்ப் போய் விடுகின்றார்கள்.   காசுதான் கடவுள் என்பது அந்த கடவுளுக்கே தெரியும்.   ஆனாலும் இனி வன்னியர்கள் காசுக்கு மயங்கக் கூடாது.   குறிப்பாக கட்சியின் பொறுப்பாளர்கள் மயங்கக் கூடாது . வாக்குகளை சிந்தாமல் பரவ திண்ணைப் பிரச்சாரம் சமூக வலைதள பிரச்சாரம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.   இங்கு காசுக்கு வேலை இல்லை என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 நகராட்சி,  பேரூராட்சி தேர்தலில் விழுப்புரத்தில் உள்ள 40 வார்டுகளிலும் பாமக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்,  கால் வலி, கழுத்து வலி, முட்டி வலி முதலியவை இருந்தாலும்,  இன்னும் கோல் நடந்தாலும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த ஊமை ஜனங்களுக்காக பாடுபடவே என்று உருக்கமுடன்  சொன்னார் ராமதாஸ் .