என்ன நடந்தது என்றே கேட்காமல் தூக்கி கடாசிய வைகோ -மதிமுக நிர்வாகி ஆதங்கம்

 
vvo

தமிழக அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக நிர்வாகியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.   என்ன நடந்தது என்றே தன்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக அந்த நிர்வாகி ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.

 தொடர் மழையினால் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் அடுத்த அழகாபுரி குடகனாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த 22 ஆம் தேதியன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சென்றிருந்தார்.  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.  தண்ணீர் திறக்க அமைச்சர் வருகிறார் என்றதும் அப்பகுதி விவசாயிகள் சங்கத்தினர் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றனர்.  இதை முன்னதாக அறிந்த போலீசார் அவர்களை கைது செய்து விட்டனர். 

ip

 மதிமுகவின் வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் ராமசாமி.  அவரும் விவசாயிகளுடன் கருப்புக்கொடி காட்ட முயன்ற தகவல் பரவ,  திமுக கூட்டணியில் இருக்கும் வைகோவுக்கு இது நெருக்கடியை கொடுத்திருக்கிறது.   தன் காதுக்கு இந்த விஷயம் எட்டியதுமே கோபப்பட்ட வைகோ,  கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவும் வேடசந்தூர் ஒன்றிய செயலாளராக இருந்த ராமசாமியை மதிமுகவில் இருந்து நீக்கி அறிவித்துவிட்டார். 

இது குறித்து ராமசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.  குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.  இதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம்.  அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் அதற்கு செவிசாய்க்கவில்லை.  

 இந்த நிலையில்தான் அமைச்சர் தண்ணீர் திறக்க வருகிறார் என்றதும் விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  விவசாயிகள் ஒன்று திரண்டு அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என முடிவு செய்தோம்.  இதை எப்படியோ தெரிந்து கொண்ட போலீசார் முன்கூட்டியே எங்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விட்டார்கள்.  இதை அறிந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்ன நடந்தது என்றே என்னிடம் விளக்கம் கூட கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

 கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான் கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு தான் கட்சியில் இருந்து வந்தேன்.  மதிமுக தொடங்கப்பட்ட காலம் முதலாக நான் கட்சியில் இருந்து வருகிறேன் அப்படி இருந்தும் என்ன நடந்தது என்று விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுத்தது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.