ராஜேந்திர பாலாஜிக்கு குறி - அலசி ஆராய்ந்த அதிகாரிகள்

 
r

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பலர் புகார் தெரிவித்து இருப்பதால் வழக்கு தொடரப்பட்டு அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.  8க்கும் மேற்பட்ட தனிப்படைகள் தேடியும் ராஜேந்திர பாலாஜியை இன்னும் கைது செய்ய முடியவில்லை.   அதற்குள் முன்ஜாமீன் பெற்று விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் போராடிக் கொண்டிருக்கிறார்.

 அடுத்தடுத்து ராஜேந்திரபாலாஜி மீது வழக்குகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.  இந்த நிலையில் மதுரை ஆவினில் பணி நியமனங்கள் உள்ளிட்ட புகார்கள் குறித்து சென்னை ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றார்கள்.

rb

மதுரை ஆவினில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடந்த பணி நியமனங்கள்,  கமிஷனுக்காக தேவைக்கு அதிகமான பொருட்கள் கொள்முதல் மற்றும் தற்காலிக பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள்,  வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.   இப்புகார் குறித்து டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் ஆவின் குழு அதிகாரிகள் இரண்டு தினங்களாக மதுரையில் விசாரணை நடத்தியுள்ளனர். 

 அப்போது கொள்முதல் மற்றும் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்யப் பட்டிருக்கின்றன.  இதுகுறித்து ஆவின் அதிகாரிகள்,  இதற்கு முன் பணியாற்றிய இரண்டு பொது மேலாளர்கள்,  பணி காலங்களில் ஏராளமான முறைகேடு ஊழல் புகார்கள் சென்னை விஜிலன்ஸ் பிரிவிற்கு வந்தது.  பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதிகாரிகள் குழு இரண்டு தினங்களாக முகாமிட்டு விசாரணை நடத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

 இந்த குழுவினர் மேலாளர்கள் முதல் ஊழியர்கள் வரை பலரிடமும் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.  அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .  

இந்த முறைகேடுகளுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது  என்று தெரிவித்திருக்கிறார்கள்.