திருமாவை கொண்டாடுவோம் - பாஜகவிக்கு எதிராக விசிகவினர்

 
t

பாஜகவுக்கு எதிராக  #திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்ட்செய்து வருகின்றனர் விசிகவினர்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் தங்கியிருக்கும் வீட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது. அவர் வெளியே காரில் ஏறி செல்ல வேண்டும் என்பதற்காக அவருடன் இருப்பவர்கள் வரிசையாகச் நாற்காலியை வைக்க அதில் ஏறி வருகிறார் திருமாவளவன்.  பின்னர் நாற்காலியின் மேல் திருமாவளவன் நின்றுகொண்டிருக்க,  அவருடன் இருப்பவர்கள் அந்த நாற்காலியை  இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்.


 நாற்காலியின் மேல் நிற்கும் திருமாவளவனை அப்படியே இழுத்துக் கொண்டு சென்று  கார் அருகே விடுகிறார்கள்.   கார் அருகே சென்றதும்,  நாற்காலியிலிருந்து காருக்குள் தாவிக் கொள்கிறார் திருமாவளவன்.  இந்த வீடியோ வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

 இதுகுறித்து தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம்,   ‘’என்ன திருமாவளவன்  சார்? கூட இருக்குறவங்கள இப்படி தான்  நடத்துவீங்களா?  சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா? மழை தண்ணில கால் வச்சு உங்களால நடக்க முடியாம பூர்வ குடி மக்களை அதிகாரம் பண்ணலாமா. அடங்கமறு.  அத்துமீறு! இதுக்கெல்லாம் அர்த்தம் இதுதானா?’’என்று கேட்டிருந்தார்.  மேலும் தமிழக பாஜகசெய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.


இதற்கு திருமாவளவன் பதில்  சொல்லி இருந்தார்.  அவர், நான் தங்கியிருப்பது ஒரு அறக்கட்டளை.  அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டியது இருந்ததால் இருக்கை மீது ஏறி  நடந்தேன். நான் கீழேவிழுந்துவிடாமல் இருக்க என்னை பிடித்துக்கொண்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும்,  இதே வேறு கட்சியினர் செய்திருந்தால் உங்கள் வாய் என்னவெல்லாம் பேசியிருக்கும் என்று விமர்சித்து வருகிறார்கள் பாஜகவினர்.  இதனால்,  #திருமாவை_கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்ட்செய்து வருகின்றனர் விசிகவினர்