ஜெயராமன் வீட்டு ரெய்டு - கொதித்தெழுந்த எஸ்.பி.வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடந்து வருகிறது. அமைச்சர்கள் வீடுகள் மட்டுமல்லாது கட்சியின் மூத்த நிர்வாகிகள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொதித்தெழுந்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அடுத்த வீரபாண்டி புதூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கே. வி. என். ஜெயராமன். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரைக்கும் பேரூராட்சியின் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அதிமுக பிரமுகரான இவர் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் லதா, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்திருந்தார் . அந்த புகாரில், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது கே.பி.என். ஜெயராமன் தனக்கு அசையும் சொத்துக்கள், நகைகள், வங்கி வைப்புத் தொகை என்று ஒரு கோடியே 25 லட்சத்திற்கு இருப்பதாக தெரிவித்திருந்தார் . இந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர் 5 ஆண்டுகள் கடந்த பின்னர் 2016ஆம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு 3 கோடியே 43 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறது.
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் வருமானத்தை விட ஒரு கோடி ரூபாய் 45 லட்சம் அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாகவும் இந்த சொத்துக்கள், நகைகள் அவரது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் வாங்கப்படுகின்றன என்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று பிற்பகலில் ஜெயராமன் வீட்டிற்கு வந்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.
அதனால்தான் இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.