’’ஜெயலலிதா படுத்திருந்த கட்டிலை காணவில்லை ’’
ஜெயலலிதா இருக்கும் வரைக்கும் அவரது அண்ணன் குடும்பத்தினரை போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்குள் வர அனுமதிக்கவில்லை. தன் உடன் பிறந்த அண்ணன் பிள்ளைகள் தான் என்றாலும் தீபாவையும், தீபக்கையும் போயஸ் கார்டன் இல்லத்தில் அனுமதிக்காமல் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனாலும் அவரின் மறைவுக்குப் பின்னர் அவரின் வாரிசுகள் என்பதால், அந்த இல்லத்தை உரிமை கொண்டாடினர் தீபாவும் தீபக்கும்.
அதிமுக இதை எதிர்த்து போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றியது. இதற்காக 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் இழப்பீட்டுத் தொகையையும் அரசு நீதிமன்றத்தில் செலுத்தியது.

ஆனால், வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என்று அதிமுகவின் நடவடிக்கையினை எதிர்த்து தீபா, தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகிய இருவருக்குமே சொந்தம் என தீர்ப்பளித்தனர் .
வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு மற்றும் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். நிலத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பின்னர் வேதா இல்லத்தின் சாவி தீபா- தீபக் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் சாவியை ஒப்படைத்து உள்ளார். மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த வெற்றி இது என்று மகிழ்ச்சியில் இருக்கும் தீபா, தனது கணவருடன் வேதா இல்லத்திற்குச் சென்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சுற்றிப் பார்த்து இருக்கிறார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மறைந்த பின்னர் இன்று தான் இங்கு வந்து இருக்கிறேன். ஜெயலலிதா மறைந்த அன்று கூட என்னால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. வாசலில்தான் நின்றுகொண்டிருந்தேன் என்று கவலை தெரிவித்தவர், ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவரது அண்ணன் பிள்ளைகளாக இருந்தும் போயஸ் கார்டனுக்குள் நுழையமுடியாத காரணத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தீபா. ஜெயலலிதாவிடம் நெருங்கவிடாமல் எங்களை தடுத்தவர் சசிகலாதான். ஆனாலும் இந்த சொத்து விவகாரத்தில் சசிகலாவிடம் இருந்து எந்த தொந்தரவும் வரவில்லை என்று தெரிவித்தவர், அதிமுக எதிர்ப்பு இருப்பதால் வேதா இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முன்பை விடவும் வேதா இல்லம் தற்போது மிகவும் மாறி இருக்கிறது என்று சொன்ன தீபா, வீட்டிற்குள் முழுவதும் சுற்றி பார்த்தேன். நிறைய பராமரிப்பு பணிகள் இருக்கிறது. அந்த பராமரிப்பு பணிகளை எல்லாம் முடித்துவிட்டுத் தான் குடி வர வேண்டும் என்றார்.
ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களிள் நிறைய பொருட்கள் காணவில்லை என்று அதிரவைத்த தீபா, தொடர்ந்து அது குறித்து, ஜெயலலிதா வாழ்ந்த அடையாளங்கள் என்று சொல்லுவதற்கு வீட்டிற்குள் எதுவும் இல்லை. அவர் படுத்து தூங்கிய கட்டிலையும் காணவில்லை. ஜெயலலிதா பயன்படுத்திய பல பொருட்கள் இங்கு இல்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் .


