இதனால்தான் எடப்பாடிக்கும் ராமதாசுக்கும் மோதலா?

 
ர்

அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் இடம்பெற்ற பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.  எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத அதிருப்தியை  தேர்தல் முடிந்ததுமே வெளிப்படுத்தியது பாமக.  

 கூட்டணிக் கட்சி அதிமுக துரோகம் செய்துவிட்டதாக தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடுங்கோபத்தில் இருந்த பாமக,  அந்த கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தியது.   ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் பாமக எம்.எல்.ஏக்கள்.   அடுத்தடுத்து கோரிக்கைகள் வைக்கிறேன் என்கிற பெயரில் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வந்தனர் பாமக எம்.எல்.ஏக்கள்.  அதே நேரம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல்  அலட்சியப்படுத்தினர்.

அர்

இது அதிமுகவிற்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.   இதன் பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ்,  கூட்டணி கட்சி காலை வாரி விட்டது.  அதிமுக துரோகம் செய்துவிட்டது என்று வெளிப்படையாகவே கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் சத்தமாக பேச,   இரு கட்சியினருக்கும் இடையேயான சுமூக போக்கு சுத்தமாக விலகியது.

 ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டதும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது என்ற பரபரப்பு எழுந்தது.  ஆனால்,  சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் தான் கூட்டணி.  ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரைக்கும் கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழல்.   அதனால்தான் பாமக தனித்துப் போட்டியிட்டது என்று அக்கட்சி நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.  ஆனால், இதில் உண்மை இல்லை என்பதை அதிமுக தலைமை அறிந்திருந்தது.

 ஊரக உள்ளாட்சி தேர்தலில்தான் பாமக தனித்து போட்டியிட்டது.  தற்போது வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் அதிமுக அணிக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.  ஆனால் ராமதாஸ்- எடப்பாடி பழனிச்சாமி இருவரும் மாறிமாறி பேசுவதைப் பார்த்தால் அதற்கு இடம் இல்லை என்றே தெரிகிறது.

 குறைந்தபட்சம் 15  தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டிய நாம்,  வெறும்  ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.  கூட்டணி தர்மத்தை கூட்டணிக் கட்சிகள் மீறியதால் தான் நமக்கு இந்த தோல்வி என்று ஒருபக்கம் ராமதாஸ் சொல்லி வர,  அதிமுக என்ன துரோகம் செய்தது என்பது ராமதாசிடம் தான் கேட்கவேண்டும் தேர்தல் வரும்போது அணி மாறுவது பாமகவின் வாடிக்கை என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . இதனால் இனி அதிமுக- பாமக கூட்டணி உடைந்து விட்டது என்று உறுதியாக தெரிய வந்திருக்கிறது. 

எர்

பாமக குறித்து எதுவும் பேசாமல் மவுனமாக இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி திடீரென்று வெடிக்க என்ன காரணம்? சேலம்,  தர்மபுரி மாவட்டங்களில் மட்டும்  எடப்பாடி பழனிச்சாமியின் சிறப்பு கவனத்தினால்  4 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றிருக்கிறது.   தொகுதிவாரியாக சராசரியாக 20 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பாமகவிற்கு கிடைத்திருக்கின்றன.   அப்படி இருக்கும் போது அதிமுக துரோகம் செய்துவிட்டதாக ராமதாஸ் தொடர்ந்து பேசி வருவது எடப்பாடிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.    மேலும் வெற்றி பெற்ற பாமக எம்எல்ஏக்கள் ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கின்றனர்.   அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவரான தன்னை சந்திக்க வருவதே இல்லை என்ற வருத்தமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து இருந்திருக்கிறது.

 இதனால் தான் இத்தனை காலமும் மவுனமாக இருந்த இடப்பாடி பழனிச்சாமி இப்போது,  பாமகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.

 பாமக 18 தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கு அதிமுகவின் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தான் காரணம்.  அவர்கள்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக இருந்ததால்,  பாமக தோல்வியடைந்து விட்டது .   குறிப்பிட்ட அந்த சமுதாய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கண்டிக்காததால்தான் ராமதாசுக்கு வருத்தம் என்கிறார்கள் பாமக தரப்பினர்.  இதனால்தான் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவு எடுத்துவிட்டார் ராமதாஸ் என்கிறார்கள் பாமக தரப்பினர்.