பதவி விலகுகிறாரா மஹிந்த ராஜபக்சே?

 
ma

 இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக இருப்பதாக பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன.  ஆனால் இலங்கை பிரதமர் அலுவலகம் இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று விளக்கம் வெளியிட்டிருக்கின்றன. 

 சுற்றுலாவை பெரிதும் நம்பி இருக்கும் நாடுகளில் ஒன்று இலங்கை.  கொரோனாவிற்கு பின்னர்  இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  உலக வங்கி வெளியிட்ட தரவுகளின்படி வேலை வாய்ப்புகள்,  கணிசமான உணவு பணவீக்கம்,  நாட்டின் பணவீக்கம் ஆகியவற்றின் விளைவாக இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ra

இலங்கை பொருளாதாரம் அவசர நிலையில் இருப்பதாக பிரதமர் ராஜபக்சே அறிவித்திருக்கிறார்.  அரிசி,  சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய ராணுவத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.  ஆனால் மக்களின் துயரங்களை குறைக்க இந்த முயற்சி  பயன் அளிக்கவில்லை என்று தகவல்கள் பரவுகின்றன .

சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இலங்கை அதிக அளவில் கடன் பெற்றிருக்கிறது.  தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த ஆண்டிற்குள் இலங்கை திவாலாகிவிடும் நிலையை தொட்டுவிடும் என்று சர்வதேச நோக்கர்கள் சொல்லி வருகின்றார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதமர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.  ஆனால் இந்த தகவல்களை இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது. 

 இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக எந்தவித திட்டமும் இல்லை.  இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை தவறாக வழிநடத்தும் இதுபோன்ற கட்டுக்கதைகளை  வன்மையாக நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.