தற்போது இந்தி டப்பிங்கில் வைரலாகுது- பிரதமரை கிண்டலடித்த வீடியோ

 
t

தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்று குழந்தைகளை வைத்து நடத்தும் ரியாலிட்டி ஷோவில் பிரதமர் மோடி கொண்டுவந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் அவரின் பல்வேறு நடவடிக்கைகளை கிண்டல் செய்து இரண்டு சிறுவர்கள் மன்னர் மற்றும் அமைச்சர் வேடத்தில் அதாவது வடிவேலு நடித்த இம்சை அரசன் படத்தில் வருவதைப் போல அதே பாவனைகளுடன் பேசி நடித்திருந்தனர்.

 நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் அதைக் கேட்டு பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.   பிரதமர் மோடி என்கிற பெயரை நிகழ்ச்சியில் சொல்ல வில்லை என்றாலும் அது பிரதமர் மோடியைத்தான் குறிக்கிறது என்பது தெரிந்ததால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

tt

இதனால் பாஜகவினர் கொதித்தெழுந்தனர்.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘’ ‘’மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்.  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்’’  என்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

  தற்போது  இந்த நிகழ்ச்சி இந்தி டப்பிங்கில் வெளியாகி இருப்பதால், அதுவும்  உரையாடல்  ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய வீடியோ வெளியாகி இருப்பதால்  பிற மொழியினரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.  அண்ணாமலை மற்றும்  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தான் இந்த வீடியோ அதிகமாக வைரலாகி வருகிறது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மன்னரும் அமைச்சரும் பேசிக்கொள்வது போல் அந்த தொலைக்காட்சியின் காட்சி.   அதில் மன்னர், ‘’ நமது நாட்டு வளர்ச்சியில் எது தடையாக உள்ளது..கறுப்பு பணம்.  அதனால எல்லா பணத்தையும் செல்லாது என்று அறிவிக்கபோறேன்.  அப்படி செஞ்சா கறுப்பு பணம் ஒழிஞ்சிடும்ல..’’ என்று கேட்க,

’’இதே மாதிரிதான் ஒரு சம்பவம்.  சிந்தியாங்குற நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரித்தான் முட்டாள் தனமா பண்ணுறாரு. ’’ என்கிறார் அமைச்சர். 

ann

’’கறுப்பு பணத்தை ஒழிச்சிட்டாரா?’’ என்று மன்னர் கேட்க, ’’கறுப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு.  கலர் கலரா கோட் மாட்டிக்கிட்டுத்தான் சுத்துனாரு.  ’’அமைச்சர் சொல்ல,  நடிகை சினேகா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியாகி பின்னர் சிரிக்கின்றனர்.

‘’நமது ஆட்சியில் மக்களை சந்தோசமாக வைப்பதற்கு நாம் என்ன செய்வது?’’ என்று மன்னர் கேட்க,    ‘’நாம ஆட்சியில இல்லேன்னாலே  மக்கள் சந்தோசமாகத்தான் இருப்பாங்க’’ என்று அமைச்சர் சொல்ல,  அரங்கமே கைதட்டி சிரிக்கிறது.

இதைக்கேட்டு மன்னர் கோபமாக,  ’’பின்னே என்ன மன்னா.. முன்பு அயல்நாட்டினரிடம் அடிமையாக இருந்தோம். இப்போது அயல்நாட்டு மன்னரிடம் அடிமையாக இருக்கிறோம்.   மக்களின் குறைகளை கேட்டால்தானே..’’ என்று சொல்கிறார் அமைச்சர்.

உடனே மன்னர், ’’நான் இப்போதுதான் நகர்வலம் சென்று வந்தேன்.  மக்கள் எல்லோரும் செல்பி எடுத்துக்கொண்டு சந்தோசமாகத்தான் இருக்காங்க’’ என்று சொல்ல,  ’’மன்னா நம் நாட்டில் சென்றால்தான் அது நகர்வலம்.  நாடு நாடாக சென்றால் அது ஊர்வலம்.  அங்கே உங்க ஆட்சி இல்லை அல்லவா அதனால்தான் மக்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்’’ என்று அமைச்சர் சொல்ல,  அரங்கத்தினர் கைதட்டி ஆரவாரிக்கின்றனர்.


’’அது சரி மன்னா.. ஏன் லாபத்தில் உள்ளதை விற்கிறீர்கள்?’’ என்று அமைச்சர் கேட்க,  ‘’என்ன அமைச்சு.. நஷ்டத்தில் உள்ளதை விற்றால் நாம எப்படி லாபம் பார்க்க முடியும்? ’’என்று கேட்கிறார்.

சரி வாங்க நாம நகர்வலம் செல்வோம்.  இப்படியே  சென்றால் மக்களை நம்மைகண்டு பிடித்துவிடுவார்களே என்று மன்னர் சொல்ல,  வடநாட்டில் செல்லும்போது மாறுவேடத்தில் செல்லுங்கள் என்றுசொல்கிறார் அமைச்சர்,  அப்படியானால் தென்னாட்டில் என்றுகேட்கும்போது,  ‘’தென்னாட்டில் நீங்க மன்னராவே சென்றாலே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்’’ என்று அமைச்சர் சொல்ல அரங்கத்தில் மீண்டும் சிரிப்பொலி.

சிறுவர்களை கொண்டு மன்னர் - அமைச்சரை என்று அந்த தொலைக்காட்சி இப்படி காட்சி எடுத்திருந்தாலும்,    பிரதமர் மோடியை கிண்டலடிப்பதாகவே உள்ளது என்று எல்லோருக்கும் புரிகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.