உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால்...
இதுவரைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு 6 ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. அவர் அமைச்சர் ஆகவேண்டும் என்கிற ஆதரவு வலுத்து வருகிறது..
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக ஆனது முதல் உதயநிதி அத்தொகுதியில் பம்பரமாகச் சுழன்று வருகிறார். தொகுதி மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தெருவாக சென்று தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் .
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு தொகுதிக்கு இப்படி செய்கிறார் உதயநிதி. 234 தொகுதி மக்களுக்கும் பயன்படும் வகையில் அவர் மாற வேண்டும். அதற்கு அவர் அமைச்சராக வேண்டும். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.
சேப்பாக்கம் தொகுதி மக்களே இதைத்தான் நினைக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்கிறாரே இதுவே ஒட்டுமொத்த தமிழகத்திற்கு அமைச்சரானால் தமிழக மக்கள் அனைவருக்கும் பயனுள்ளது என்று அப்பகுதி மக்கள் நினைக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து திமுகவின் மற்ற அமைச்சர்களிடமும் செய்தியாளர்கள் தொடர்ந்து கருத்து கேட்டு வருகின்றனர். அதற்கு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் நாசரும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் உழைப்பு அபாரமானது. மு.க .ஸ்டாலினுக்கு பிறகு மக்கள் மத்தியில் வசீகரமான தலைவராக உதயநிதி உருவெடுத்து இருக்கிறார். அதனால் அவர் அமைச்சர் ஆவதில் எந்த தவறும் இல்லை. அவர் அமைச்சராக வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். அவர் அமைச்சராக அதில் எந்த தடையுமில்லை.. இருக்காது என்று தெரிவித்து இருக்கிறார்.
அமைச்சரும், திமுகவின் மூத்த நிர்வாகியுமான கே.என்.நேருவும் கூட, கூட முதல்வர் விரும்பினால் அது நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.