தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டேன் - அதிமுகவை எச்சரித்த நீதிபதி

 
d

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் தொடர்ந்த வழக்கு என்பதாலும்,  ஒரு தரப்பு வாதமாக இருக்கிறது என்பதாலும் அதிமுக தேர்தலை ரத்து செய்ய மறுத்துள்ளார் நீதிபதி. அதே நேரம்,  தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி.   இவர், காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து  ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு குழுவிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாகக் கருத்து தெரிவித்ததால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.   இவர்,  தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது.  இந்நிலையில்,  அதிமுகவின் தேர்தலை ரத்து செய்யக்கோரியும்,  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்தக்கோரியும்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

h

தேர்தல் வரும் 7ம் தேதி என்பதால்,  அவசர வழக்காக எடுத்து இன்று மதியம் விசாரணை நடந்தது.  நீதிபதி அப்துல் குத்தாஸ் இந்த வழக்கினை விசாரித்தார்.  

 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில்,  தற்போது இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.  கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை என்று அதிமுக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 

 கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அதை எதிர்த்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி இந்த வழக்கை தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி . அதற்கு,  கே.சி.பழனிச்சாமி நீக்கம் செல்லாது என்ற அவரது தரப்பினர் விளக்கம் அளித்தனர்.

h

மேலும்,  உறுப்பினர்கள் முறைபடுத்த படவில்லை.  உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது.  வாக்களிக்கத் தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை.  அதனால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு போலீஸ் பாதுகாப்போடு தேர்தல் நடத்த வேண்டும் என்று பழனிச்சாமி தரப்பில் கோரப்பட்டது.

 இதையடுத்து நீதிபதி,   ஒரு தரப்பு வாதத்தை கேட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.  ஆனாலும்,  தேர்தலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தேர்தலை ரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என்று எச்சரிக்கை தெரிவித்தார்.

அதன் பின்னர்,  இந்த வழக்கு குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அதிமுக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு,   விசாரணையை ஜனவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்ததார் நீதிபதி .