உயிரே போனாலும் நான் காசு வாங்க மாட்டேன் - ராமதாஸ் உருக்கம்

 
rm

வீரம், மானம் எல்லாம் எங்கே போனது என்று தொண்டர்களிடம் ஆவேசமாக கேட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்.  

 திண்டிவனம்,  செஞ்சி, வானூர்,  மயிலம் சட்டமன்றத் தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.   பாமக நிறுவனர் ராமதாஸ் இதில் பங்கேற்று பேசிய போது,   நம்மிடம் சக்தி இல்லை சக்தியை இழந்து கிடக்கிறோம் அதனால் தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம்.  ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று நீங்கள்தான் வற்புறுத்தினீர்கள் என்று தொண்டர்களை பார்த்து சொன்னார்.

மேலும்,  நீங்கள் சொன்னதால்தான் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்எல்ஏக்கள், 25 எம்எல்ஏக்கள், 18 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள் 10 ஆண்டுகாலம் 2 மத்திய அமைச்சர்கள் என்று பாமகவின் பலம் செல்வாக்கு உயர்ந்தது.   அப்போது நீங்கள் சொன்னீர்கள்,   தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என்று.  

ar

ஆனால்,  தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறோம்.   திமுகவுக்கும் காங்கிரசுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்து விட்டார்கள்.   இதனால்தான் இரண்டு தொகுதிகளை இழந்துவிட்டோம்.   அந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும்.

 இந்த நிலை உள்ளாட்சித் தேர்தலிலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தான் திண்ணைப் பிரச்சாரம்.  சோசியல் மீடியா பிரச்சாரம் என்று அறிவுறுத்தினார்.

 அவர் மேலும்,   கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட ஆளில்லை என்கிறார்கள்.   இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.   இந்த நிலை தொடர்ந்தால் பலம் இழந்து விடுவோம். நான்  நம்முடைய பகுதியை மட்டும் சொல்லவில்லை.   தமிழகம் முழுவதும் உள்ள நிலையைத்தான் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று சொன்ன ராமதாஸ்,

பாமகவுக்கு ஏன் இந்தப் பின்னடைவு .   வீரம் மானம் எல்லாம் எங்கே போனது என்று தொண்டர்களை பார்த்து கேட்டார்.

 நான் எப்பவும் பாமகவின் தொண்டனாக இருப்பேன்.   உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என்று இருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் அன்புமணிக்கு என்ன குறை இருக்கிறது.   அவரது தலைமையில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் .  அதற்கு ஊர் ஊராக திண்ணைப் பிரச்சாரம் சோசியல் மீடியா பிரச்சாரத்தையும் பாமகவினர் செய்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.