இதைவிட மோசமாக பேச எனக்கு தெரியும்...கொதித்தெழுந்த அன்புமணி
இதைவிட மோசமான வார்த்தைகளைப் பேச எனக்கு தெரியும் என்று கொதித்தெழுந்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டதைப் போலவே பெரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிட முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக கட்சியை மாவட்டம் தோறும், கிராமம் தோறும் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2016ல் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது போலவே 2026 தேர்தலிலும் அன்புமணியை முன்னிறுத்தும் முடிவில் இருக்கிறார் ராமதாஸ்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சராக வேண்டும் என்ற வெறி எனக்கு இல்லை. அதேநேரம் தமிழகத்தை பாமக ஆளவேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பாமக கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகி விட்டது. நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதற்காக இனியும் இப்படியே இருந்து விட முடியாது .
2016 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் ஆள வேண்டும் என கேட்டோம். அதே 2019 மற்றும் 2021 தேர்தலில் அவர்கள் ஆள வேண்டும் என கேட்டோம். மீண்டும் 2026 தேர்தலில் நாம் ஆள வேண்டும் எனக் கேட்போம். அடுத்த முறை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்றார் .
மேலும், எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான்காண்டுகள் எளிமையான முதல்வராக இருந்தார். பல்வேறு எதிர்ப்புகளை மீறி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தார். ஆனால், 42 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த இட ஒதுக்கீட்டிற்கு சப்பைக் காரணம் சொல்லி உயர் நீதிமன்றம் தடுத்துவிட்டது. இதைவிட மோசமான வார்த்தைகளைப் பேச எனக்கு தெரியும் என்று சொல்லி ஆவேசப்பட்டார்.