#ArrestAnnamalai புதிய வீடியோவால் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

 
aa

 மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தி வரும் நிலையில்,  தற்போது மாணவியின் வாக்குமூலமாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   இதை அடுத்து #ArrestAnnamalai என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.  

la

 மாணவி லாவண்யா தூய மைக்கேல் மாணவியர் விடுதியில் எட்டாம் வகுப்பில் இருந்து தங்கிப் படித்து வருவதாகவும் நான்கு ஆண்டுகளாக முதல் மதிப்பெண் எடுத்து வந்த நிலையில் கடைசி ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு தாமதமாக சென்றதாகவும் ஹாஸ்டலில் உள்ள சிஸ்டர் சகாயமேரி கணக்கு வழக்கு பார்க்க சொல்லியதாகவும்,   தாமதமாக வந்ததால் கணக்கு வழக்கில் தனக்கு புரியாது என்றும் பிறகு எழுதித் தருகிறேன் என்று தெரிவித்ததாகவும் ,  கணக்கு வழக்கு பார்த்து விட்டு பிறகு உன் வேலையை பாரு என்று கட்டாயப்படுத்தியதாக மாணவி அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

 கணக்கு வழக்கு சரியாக எழுதி கொடுத்த போதும் தப்பாக இருக்கிறது என்று சொல்லி ஒரு மணி நேரம் உட்கார வைத்து விடுவார்.  இதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.   இதனால் 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விடும் என்று நினைத்து விஷம் குடித்து விட்டேன் என்று அந்த மாணவி வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

ann

 பொட்டு வைக்கக்கூடாது என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் ஏதாவது சொன்னார்களா என்று என்று கேட்கப்பட்டபோது,  அப்படியெல்லாம் எதுவும் யாரும் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார் அந்த மாணவி.    பள்ளி நிர்வாகத்தால் வேறு யாரேனும் உன்னை தொந்தரவு செய்தார்கள் என்று கேட்டதற்கு, அதற்கும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

மதம் மாறாத சொன்னதால்தான் விஷம் குடித்தேன்  என்று மாணவி சொன்னதுபோல் ஒரு வீடியோ வெளியாகியிருந்த நிலையில் அதற்கு மாறாக தற்போது இந்த வீடியோ வெளியாகி இருப்பது மாணவியின் தற்கொலையில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   இதற்கிடையில் அண்ணாமலை மாணவியின்  மரணத்தை தவறாக சித்தரிக்கிறார் என்றும்,  மத பிரச்சினையை தூண்டுகிறார் என்றும்  சொல்லி அவரைக் கைது செய்ய வேண்டும் என்று,  #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.