அதிமுகவை வளர்க்கும் வேலை அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா?
அதிமுகவை வளர்க்கும் வேலை அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். அதற்காகத்தான் அவர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்கிறார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.
காங்கிரஸ் பிரமுகரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் பெரியாரின் 48வது தின நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் பெரியார் என்று பெரியாரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது , மாற்றுக் கட்சியினரை கைது செய்யும் தமிழக அரசின் நடவடிக்கை எடுத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ’’மோடி இந்திய அளவில் சர்வாதிகாரியாக செயல்படுவதை பாஜகவினர் மறந்துவிடக்கூடாது. ஸ்டாலின் ஆட்சியின் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லலாமா? சட்டப்படி அவற்றை சந்திக்கலாம் ’’என்றார்.
அதன் பின்னர், அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ’’நான் காங்கிரசை சேர்ந்தவன் காங்கிரசை வளர்ப்பது தான் என் வேலை. இதுபோல் அதிமுகவை வளர்க்கும் வேலை அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அவர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.