முதல்வர் என் அறிவுரையை ஏற்று நடந்ததில் மகிழ்ச்சி - ஜெயக்குமார
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் பை ஒன்றும், ஒரு முழுக் கரும்பு மற்றும் வேட்டி சட்டை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருகிறது.
இந்த பொங்கல் பை தொகுப்பில் பொருட்கள் குறைவாக இருக்கிறது என்றும், பொங்கல் தொகுப்பு வழங்க கொடுக்கப்படும் பை இல்லை என்றும் பல்வேறு இடங்களில் மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், பை தைப்பதில் தாமதமாகிறது என்று முதல்வரே அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார் . பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதுகுறித்து தெரிவித்தார்.
பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் பாதி பொருள்கள் இல்லை என்பதால் மக்கள் திமுகவை திட்டி தீர்க்கிறார்கள். இதை அறிந்து கொள்ள அரசர் காலத்தில் அரசர் நகர்வலம் செல்வதுபோல சென்று மக்களின் மனநிலையையும் திட்டத்தின் பயன்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம் என்று நான் சொல்லியிருந்தேன். என்னுடைய அறிவுரையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார் .
அவர் மேலும், ராஜேந்திரபாலாஜி விவகாரம் குறித்து, வழக்கு விசாரணைக்கு சென்ற ராஜேந்திரபாலாஜியை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இதனை நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் திமுகவின் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது என்றவர், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இதுவரைக்கும் 550 கொலைகள் நடந்திருக்கின்றன. துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து விட்டது. செங்கல்பட்டில் இரட்டை கொலை , அடையாறில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன என்று குற்றம் சாட்டினார்.