’’முதலில் நீங்கள் சினிமா துறையில் உள்ள அரசியலை சரியாக பழகுங்கள்’’
பெரும்பாலும் பணபலம் , சாதி, மதம் இவைகளை மட்டுமே பார்த்து தகுதியும் திறமையும் இல்லாதவர்களையே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக தேர்வு செய்கின்றன. அதுபோலவேதான் மக்களும் அப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் தூய்மையான நேர்மையான அரசியல் பற்றிப் பேச அரசியல்வாதிகளுக்கும் தகுதியில்லை மக்களால் கேள்வி கேட்க முடிவதில்லை.
தகுதி உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அரசியலுக்கு வரக்கூடிய எல்லா தகுதிகளும் என்னிடம் இருக்கிறது. என்னைத் தவிர வேறு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது. ஆனால் இங்கே அந்த தகுதி முக்கியமில்லை என்று அவ்வப்போது அரசியல் பற்றி சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான். தற்போது மீண்டும் அரசியல் குறித்தும் அரசியல் தலைவர்கள் முடித்தவர்கள் தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

அரசியல் என்பது ஒரு தொழிலாக மாறிவிட்ட இக்காலத்தில் மக்களுக்கானத் தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிக்கபோவதில்லை. இருப்பதிலேயே தரமானவர்கள் யார் என்பதை நாம்தான் அடையாளம் கண்டு அவர்களிடத்திலுள்ள குறைகளை நீக்கி வளர்த்தெடுக்க வேண்டும் என்கிறார் தங்கர்பச்சான்.
தங்கர்பச்சானின் இந்த பதிவுக்கு பலரும், இப்போ இருக்கிற தலைவர்களில் சிறந்தவர் கமல் மட்டுமே என்றும், நீங்கள் எதிர்பார்க்கும் தலைவர் கமல்ஹாசன் என்றும் சொல்லி வருகின்றனர்.
ஒரு சிலரோ, முதலில் நீங்கள் சினிமா துறையில் உள்ள அரசியலை சரியாக பழகுங்கள். பின் பொது அரசியலை பற்றி பேசலாம் என்று பதிலடிகொடுத்து வருகிறார்கள்.


