எடப்பாடி - டிடிவி தினகரன் நேருக்கு நேர் : மெரினாவில் பதற்றம்

 
e

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அமமுகவினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் நினைவிடத்தில் திரண்டு வந்து  மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

m

 இதன்பின்னர் அமமுகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும்.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி -ஓ. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திவிட்டு செல்வதற்குள்ளாகவே அமமுகவினர் அஞ்சலி செலுத்த வந்துவிட்டனர். 

 இருவருக்கும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கியதால் இந்த சிக்கல் ஏற்பட்டது.    எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் வாகனங்கள் செல்ல முற்பட்ட போது எதிரே அமமுகவினர்  வந்ததால்  காமராஜர் சாலையில் போக்குவரத்து முடங்கியது.   இதனால் அங்கு பெரும் பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது.

 அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அமமுகவினர் முழக்கமிட்டதால்  பெரும் பதற்றம் ஏற்பட்டது.  இதனால் அதிமுகவினர் அமமுகவினர்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

mee

 பின்னர் நிலைமையை சமாளித்து கொண்டு பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி இருவரும் புறப்பட்டு நிர்வாகிகளும் அங்கிருந்து சென்று விட்டனர்.  அதன் பின்னர் ஜெயலலிதாவை நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் டிடிவி தினகரன்.

அம்மா காட்டிய பாதையில் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்கிறோம் என்று டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.