திமுக - மார்க்சிஸ்ட் உறவில் விரிசல் : உறுதிப்படுத்திய ஆ.ராசா

 
ra

திமுக -மார்க்சிஸ்ட் கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.  திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா இதை தனது பேச்சின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

 திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சில மாதங்கள் அமைதியாக இருந்த மார்க்சிஸ்ட் தற்போது வெளிப்படையாகவே திமுகவின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதோடு அல்லாமல் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.  போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

r

 அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் பெரம்பூர் பணிமனையில் அமைந்திருக்கும் நோட்டீஸ் பலகையில்,  பெருமை என்கிற தலைப்பில்,  தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் போனஸ் கொடுத்த பெருமை, எட்டு  நாட்களுக்கு முன்பு பண்டிகை முன்பணம் கொடுத்த பெருமை,  சம்பள பட்டுவாடா சட்டத்தை மீறி காலதாமதமாக சம்பளம் வழங்கும் பெருமை,  எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராடுவதும் ஆளுங்கட்சியாக வந்தவுடன் அமைதி காப்பதும் பெருமை,  போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடங்கிய இடத்திலேயே நிறுத்திய பெருமை,   பெருமையோ பெருமை விடியல் ஆட்சிக்கு... என்று நோட்டீஸ் போர்டில் எழுதி போட்ட வஞ்சப்புகழ்ச்சி வாசகர்கள் திமுகவை கடுமையாக பாதித்திருக்கிறது .

கோவை அன்னூர் தொழில் பூங்கா அமைக்க 3,800 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டிருப்பதில்  சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள் .   சென்னை -சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் போல இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

 விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிகளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள்  வார்டுகளை எதிர்பார்க்கும் நிலை இருக்கிறது .  இந்த நிலையில் திமுகவை எதிர்த்து  வரும் மார்க்சிஸ்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருக்கிறார்  ஆ.ராசா.  அண்மையில் சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராசா மார்க்சிய பார்வையில் பெரியாரைப் பார்க்க தவறியதால் தான் இந்தியாவில் இன்று மார்க்சியம் அழிந்து வருகிறது.  நேருவும், இந்திரா காந்தியும் பிரதமராக இருந்தபோது கம்யூனிஸ்டுகள் என்றால் பயந்தார்கள்.  ஆனால் இன்றைக்கு கம்யூனிஸ்ட்களின் நிலை பரிதாபகரமாக மாறிவிட்டது என்று பேசியிருக்கிறார்.

y

 ஒரு காலத்தில் 70 எம்பிக்கள் இருந்த நிலை மாறி இப்போது 7 அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.  அவர் மேலும்,   இந்திய கவர்னர் ஜெனரல் சபையின் சட்ட உறுப்பினர்களில் ஒருவரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவருமான சிபி ராமசாமியிடம்,  இந்தியாவில் கம்யூனிஸ்ட் வளருமா என்று கேட்டார்கள். அதற்கு அவர்,  இந்து மதம் இங்கே இருக்கும் வரைக்கும் அரையடி சாமி சிலை இருக்கும் வரைக்கும் கம்யூனிசம் இங்கே வளராது என்று பதில் சொன்னார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டினை கடுமையாகத் தாக்கினார்.

 பின்னர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது தனக்கு இருக்கும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.  2ஜி வழக்கின் போது சீதாராம் எச்சூரி- பிருந்தா காரத் ஆகியோரிடம் 2ஜி வழக்கில் எந்த தவறும் நடக்கவில்லை . கொஞ்சம் நிதானமாக இதை படித்து பாருங்கள் என்று நான் கூறினேன்.  ஆனால் என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை . பாஜக உடன் சேர்ந்து கொண்டு எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்.

b

 ஒரு முறை கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்து இருந்தார்கள்.  அப்போது என்னிடம் வழக்கு எப்படி செல்கிறது என்று கேட்டார்கள்.  பாஜகவினரை மன்னிக்கலாம் காங்கிரசையும் கூட மன்னிக்கலாம்.  ஆனால் கம்யூனிஸ்டுகளை எப்படி மன்னிக்க முடியும் என்று நான் கேட்டேன் . பின்னர் நான் அந்த வழக்கில் விடுதலையான பின்னர் நாங்கள் செய்தது தவறுதான் எங்களை மன்னித்துவிடுங்கள் என்று தெரிவித்தார்கள் என்றார் ராசா.

 ராசாவின் இந்த பேச்சு,  தமிழ்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரர்களைப் பற்றி அல்ல, மார்க்சிஸ்ட் தலைமை பற்றிதான், அவர்கள் மீதுள்ள கோபத்தில் தான் அவர் அப்படி பேசியிருக்கிறார் என்று சொல்வதற்கில்லை.  கூட்டணியில் உள்ள ஒரு கட்சியினரை பற்றி இப்படி தலைமையின் அனுமதி இல்லாமல் பேசியிருக்க முடியாது.  ராசா இப்படி பேசி இருப்பதால் இது கூட்டணியை வேண்டுமென்றே சீண்டுவதாகத் தான் அர்த்தம் என்கிறார்கள்.

 இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் ராசாவின் பேச்சு அமைந்திருக்கிறது என்றும் பரபரப்பு எழுந்திருக்கிறது.