சசிகலாவுடன் தினகரன் அவசர ஆலோசனை
அதிமுகவில் மீண்டும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்று தீவிர முயற்சியில் இருந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியே இனி கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை தான் இனி எப்போதும் என்றும், இரட்டை தலைமையில்தான் அதிமுக இயங்கும் என்று சட்ட திருத்த விதிகள் செய்து சிறப்பு தீர்மானமும் செயற்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தல் வரும் 7-ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சசிகலாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை தி. நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நிகழ்ந்ததாக தகவல்.
அமமுகவின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நீலாங்கரை சி. முனுசாமி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நேற்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் குறித்தும், முனுசாமியின் ராஜினாமா குறித்தும் இந்த சந்திப்பில் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.


