தமிழகம் இருட்டுக்கு செல்லும் அபாயம் - நிதி அமைச்சருக்கு பாஜக எச்சரிக்கை

 
ptr

தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 16,725 கோடி இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த நிலுவை எந்த அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. 

அவர் மேலும்,  கடந்த 2020-21 மற்றும் இந்த நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டு வரை ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகை ரூபாய்.37,134 கோடி மட்டுமே. அதில் தமிழத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய். 2894 கோடி மட்டுமே. இதே காலகட்டத்தில்  மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, முறையே 6723 கோடி, 3528 கோடி, 3145 கோடி மற்றும் 3125 கோடி செலுத்த வேண்டியுள்ளது.  மேலும், ஜி எஸ் டி  சட்டத்தில் குறிப்பிட்டது போல்  மாநிலங்களுக்கு சேர வேண்டிய மொத்த நிதியையும் மத்திய அரசு அளிப்பதில் உறுதியாக உள்ளது என்பதை டிசம்பர் 13,2021  அன்று தொடர்புடைய துறை அமைச்சர் தெளிவுபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

np

அதே நேரத்தில், இல்லாத ஜிஎஸ்டி நிலுவையை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று தவறான தரவுகளை மேற்கோள் காட்டும்  தமிழக அரசு, மின்சார கொள்முதல் செய்ததின் அடிப்படையில், மத்திய அரசு மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ரூபாய். 22,000 கோடி செலுத்தாமல் இருப்பது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஏன்? என்பதையும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள்  விளக்க வேண்டும். இது தொடருமானால், மின்மிகை மாநிலமாக இருக்கும் தமிழகம் மின் பற்றாக்குறை மாநிலமாக மாறி இருட்டுக்கு செல்லும் அபாயத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்வாரா? என்று எச்சரித்திருக்கிறார்.